'என்னை நிறத்தை வைத்து விமர்சிப்பதா?' – பிரியாமணி ஆதங்கம்

‘ஒரேயொரு நாள், நான் நானாக இருக்க விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார் நடிகை பிரியாமணி.  

‘பருத்தி வீரன்’ படத்தில் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியாமணி திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.  தமிழில் கடைசியாக 2012-ம் ஆண்டு ‘சாருலதா’ என்ற படத்தில் பிரியாமணி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு பிறமொழி படங்களிலும் வெப் தொடர்களிலும் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரியாமணி அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் கருப்பாக இருக்கிறேன்; குண்டாகி விட்டேன் என சோஷியல் மீடியாவில் சிலர் விமர்சனங்கள் செய்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”சமூக வலைதளங்களில் எனது தோல் நிறம் குறித்து நிறைய பேர் பேசுகிறார்கள். 99% பேர் நல்லபடியாக சொல்கிறார்கள். ஆனால் இந்த ஒரு சதவீதம் பேர்தான் நான் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்று விமர்சிக்கின்றனர். நீங்கள் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் உடல் எடை அதிகரிக்கும்போது அல்லது கணிசமான அளவு எடை குறையும் போது அனேகம்பேர் கவனிக்கிறார்கள். நாம் பொது நபராக இருப்பதால் அதன் ஒரு பகுதியாக இதனை எடுத்துகொள்ள வேண்டியுள்ளது.  

image

சினிமா துறையில், நீங்கள் எல்லா நேரத்திலும் முதன்மையானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும். மேலும் உங்கள் உடல், தோல், முடி மற்றும் நகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் பராமரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்வது கடினமானக உள்ளது. ஒரேயொரு நாள், நான் நானாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் விரும்பியதை சாப்பிட விரும்புகிறேன். நான் அழகாக இருக்க விரும்பவில்லை. அவ்வளவுதான்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எண்ணம். நீங்கள் ஏதாவது நேர்மறையானதாகச் சொல்ல விரும்பினால், அதைச் சொல்லுங்கள். நீங்கள் அவ்வாறு சொல்லவில்லை என்றால், அதை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஏன் உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிக்க: ‘திருவிழா போல ஏற்பாடு’ – கொட்டும் மழையிலும் ‘பீஸ்ட்’ முதல் காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.