மும்பை: தொகுதி பங்கீட்டு, வேட்பாளர் தேர்வு… இழுத்தடிக்கும் கட்சிகள்; குழப்பத்தில் தொண்டர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக இன்று நடக்கும் தேர்தலில் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மராத்வாடா மற்றும் விதர்பா தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அகோலா தொகுதியில் பிரகாஷ் அம்பேத்கரும், அமராதி தொகுதியில் நடிகை நவ்னீத் ரானாவும் போட்டியிடுகின்றனர். நவ்னீத் ரானா கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இப்போது பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள எட்டு தொகுதியிலும் சிறுபான்மை மக்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாக்கு தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மும்பை

நாட்டில் ஐந்தாவது கட்டமாக நடக்கும் தேர்தலில் தான் மாநிலத்தில் தலைநகரான மும்பையில் தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள 13 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. அதில் பா.ஜ.க கூட்டணி மும்பையில் 3 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தென் மும்பை மற்றும் வடமேற்கு மும்பை தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது தொடர்பாக சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) மற்றும் பா.ஜ.க இடையே இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் இத்தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

மும்பையில் மொத்தமுள்ள 6 தொகுதியில் காங்கிரஸ் வடக்கு மும்பை மற்றும் வடமத்திய மும்பை தொகுதியில் போட்டியிடுகிறது. நேற்று மும்பை காங்கிரஸ் தலைவரும், தாராவி எம்.எல்.ஏ.வுமான வர்ஷா கெய்க்வாடை வட மத்திய மும்பை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது. இத்தொகுதிக்கு பா.ஜ.கவும் வேட்பாளர் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. செல்வாக்கு மிக்க மராத்தி வேட்பாளரை பா.ஜ.க தேடிக்கொண்டிருக்கிறது. வடக்கு மும்பை தொகுதிக்கு இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வர்ஷா கெய்க்வாட்

இதே போன்று தானே தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. ஆனால் அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது. கல்யாண் தொகுதியில் சிவசேனா சார்பாக ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டியிடுவார் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆனால் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே பெயரை சிவசேனா இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. கல்யான் தொகுதியில் சிவசேனா போட்டியிட்டால் தங்களுக்கு தானே தொகுதி வேண்டும் என்று பா.ஜ.க கூறுகிறது. ஆனால் தானே முதல்வரின் சொந்த ஊர் என்பதால் அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா கூறிக்கொண்டிருக்கிறது.

பாஜக, காங்கிரஸ்

இது தவிர பால்கர் மற்றும் நாசிக் தொகுதிக்கும் வேட்பாளர்களை பா.ஜ.க கூட்டணி அறிவிக்கவில்லை. இத்தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறது. நாசிக் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை. பா.ஜ.க கூட்டணி இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது. மும்பையில் இம்முறை கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலார் கூறுகையில், ”சில தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். மும்பை மக்கள் உணர்வுகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். வளர்ச்சித்திட்டங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனாலும் சில தொகுதியில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.