மேஜிக்கல் லேடி – 349 | புத்தம் புது காப்பி | திரைக்கதை எழுத வாங்க!

இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு கதை

காட்சி 1:

(தக்க பின்னணி இசையுடன் கூடிய காட்சிகள் ஓர் மிகப்பெரிய அரங்கு. அதில் உலகெங்கும் இருந்து வந்திருக்கும், விஞ்ஞானிகள் எல்லோரும் குழுமி இருக்கிறார்கள். அங்கு ஒரு சிறு மேடை. விஞ்ஞானிகள் ஒவ்வொருவராக, அவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகளையும், அதன் அறிவியல் கோட்பாடுகளையும் விளக்கி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் அரங்கினுள் ஒருவன் அதிரடியாக நுழைகிறான். அவனுடன் சேவகர்கள் சிலரும் வருகிறார்கள். அவன் அந்த மேடை மீது ஏறி நிற்கிறான். )

(அரங்கம் அமைதியானது. அவன் பேசத் தொடங்குகிறான்.)

இளவரசன்: உலகெங்கும் இருந்து வந்து இங்கு கூடியிருக்கும் விஞ்ஞானிகளே ! உங்களுக்கு என் வணக்கங்கள் ! என் பெயர் ஹென்றி. நான் ஒரு இளவரசன். நான் இங்கு வந்ததன் நோக்கம்…

(இளவரசன் அவன் சேவகனைப் பார்க்கிறான்)

(சேவகர்கள் ஒரு மேசையை இழுத்துவந்து அந்த மேடை முன் போடுகிறார்கள். இளவரசன் தன் ஆடைக்குள் இருந்து ஒரு கண்ணாடித் துண்டு போன்ற ஒரு பொருளை எடுத்து அந்த மேசை மீது வைக்கிறான்)

இளவரசன்: இந்தப் பொருள் பார்க்க ஒரு கண்ணாடித் துண்டு போல் தோன்றினாலும், இது கண்ணாடியால் செய்யப்பட்டதல்ல. “இது எந்த மூலப் பொருளால் செய்யப்பட்டது ?”, என்பதை என் நாடு முழுக்கத் தேடியும், என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. என் நாட்டு விஞ்ஞானிகள் கூட கை விரித்து விட்டார்கள். இப்போது உலக விஞ்ஞானிகளாகிய உங்கள் முன் நிற்கிறேன்.

எனக்கு தேவை எல்லாம் இந்தத் படிகத் துண்டு எந்த மூலப் பொருளால் செய்யப்பட்டது, அந்த மூலப் பொருள் எந்த நாட்டில் கிடைக்கும் என்கிற தகவல்தான்.

அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானமும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்யும் எல்லா அறிவியல் ஆய்வுகளுக்குத் தேவையான பொருளுதவியும் வழங்கப்படும்.

(இளவரசன் பேசி முடிந்ததும், அந்தக் கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது. விஞ்ஞானிகள் பலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சிலர் எழுந்து வந்து, அந்த மேசை மீதிருந்த படிகத் துண்டில் இருந்து, துகள் மாதிரிகளை சேகரித்து கொண்டார்கள்)

இளவரசன்: என் நாட்டைப் பற்றிய, எங்கள் அரண்மனை பற்றிய தகவல் குறிப்புகள் இங்கு பகிரப்படும். இந்தப் பொருள் பற்றி யாரேனும் என்னை தொடர்பு கொள்ள விரும்பினால், அந்த குறிப்புகளின்படி தொடர்பு கொள்ளலாம். நன்றி!

(பேசி முடித்துவிட்டு, இளவரசன் அந்த அரங்கை விட்டு வெளியேறினான்.)

காட்சி 2:

(அடுத்த சிலநாட்களில், இளவரசனுக்கு விஞ்ஞானிகளிடம் இருந்து நிறைய கடிதங்களும், குறிப்புகளும் வரத் தொடங்கின. ஆனால் பெரும்பாலான கடிதங்கள், அந்த மூலப் பொருள் என்னவென்று தெரியவில்லை என்றும், அதன் மூலக்கூறுகள் தாங்கள் இதுவரை பார்த்திராத ஒரு வடிவத்தில் இருப்பதாகவும் தான் எழுதப்பட்டிருந்தன. அதனால் இளவரசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால், ஒரு கடிதம் இளவரசனை ஆச்சரியத்தின் எல்லைக்கே எடுத்துச் சென்றது. அந்தக் கடிதத்தை எழுதிய விஞ்ஞானி குறிப்பிட்டு இருந்தது இதுதான்…

“இந்த பொருள் நிச்சயமாக பூமியை சார்ந்ததாக இருக்க முடியாது. இதன் மூலக்கூறுகள் பூமியின் நிலை கொள்ளும் தன்மை பெற்று இருந்தாலும், இவை உருவான இடம் நிச்சயம் பூமியாக இருக்க வாய்ப்பில்லை. நானறிந்த அறிவியல் கோட்பாடுகளின் படி, இது ஒரு வேற்று கிரக பொருள்தான்.”

அடுத்து அடுத்த சில நாட்கள் குழப்பத்திலேயே கழிந்தன. மீண்டும் ஒரு கடிதம்.

இந்த முறை, இது வேறு ஒரு விஞ்ஞானியிடமிருந்து ரத்தினச் சுருக்கமாக…

“தாங்கள் கொடுத்த பொருள் பற்றி, சில முக்கியமான தகவல்களைக் கண்டறிந்து இருக்கிறேன். நேரில் வரவும் விரிவாகப் பேசலாம்!”

(சற்றும் தாமதிக்காமல் இளவரசன் கிளம்பினான்.)

காட்சி 3:

(இளவரசன் உள்ளே நுழைந்தான்.அது ஒரு வானவியல் ஆய்வுக்கூடம். பல்வேறு அளவுகளிலான தொலைநோக்கிகளும், சுவரெங்கும் வானவியல் குறிப்புகளும், ஓவியங்களும் நிரம்பி இருந்தன. ஆய்வுக் கூடத்தின் மேல் பகுதியில் இருந்து ஒரு குரல் கேட்டது)

வானவியல் அறிஞர்: வணக்கம் இளவரசே! மேலே வாருங்கள்… நிறைய பேச வேண்டியது உள்ளது.

இளவரசன் (ஆர்வமாக): தாங்கள் கண்டுபிடித்ததுதான் என்ன?

வானவியல் அறிஞர் (தீர்க்கமாக): என் கணிப்பு சரியானால், இந்த பொருளின் மூலப்பொருளை, இந்த பூமியில் எங்குமே உங்களால் கண்டறிந்து இருக்க முடியாது சரிதானே!

இளவரசன் (ஆர்வமாக): ஆம் ! ஆனால் எப்படி இவ்வளவு தீர்க்கமாகச் சொல்கிறீர்கள்?

வானவியல் அறிஞர் (தீர்க்கமாக): ஏனென்றால், இந்த பொருள் இந்த பூமிக்கு சம்பந்தப்பட்டதே கிடையாது. இது வேறு ஒரு கிரகத்தைச் சேர்ந்த பொருள். அது மட்டுமல்ல, அது எந்த கிரகம் என்பது கூட எனக்கு தெரியும்.

இளவரசன்: எப்படி ?

வானவியல் அறிஞர் (விளக்கமாக): இந்த பேரண்டத்தின் எல்லா அணுக்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த பூமியில் இருக்கும் எல்லா அணுக்களும், விண்வெளியில் உள்ள அது சார்ந்த அணுக்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் கூடலாம், குறையலாமே தவிர, அது சுத்தமாக அற்று போய் விடாது. எங்கள் வான்வழி ஆய்வுகள் எல்லாமே இதை அடிப்படையாகக் கொண்டதுதான்.

கிரகண காலத்தில் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்கள், பௌர்ணமியின் போது மட்டும் ஏற்படும் உயரமான கடல் அலைகள்… இவையெல்லாம் பூமியின் அணுக்களுக்கும், அது சார்ந்த வேற்றுக்கிரக அணுக்களுக்கும் இருக்கும் ஈர்ப்பினால் வரும் விளைவுகள்.

தாங்கள் கொடுத்த பொருளின் மாதிரிகளிலும், இதே போன்றதொரு விளைவை நான் கண்டதால்தான், இந்த பொருளுக்கும் ஒரு கிரகத்திற்கும் உள்ள தொடர்பை நான் கண்டு பிடித்தேன். பெரோனா(Fairona) என்று ஒரு கிரகம் உள்ளது. அது ஒரு மாய கிரகம்.

நம்மைச் சுற்றி இருக்கும் மற்ற கிரகங்கள் போல, அல்லது சந்திரன் போல, இது வான்வெளியில் ஒரு சீராக தெரிவதில்லை.

சில நாட்கள் தெரியும். பல நாட்களில் மறைந்து போகும்.மீண்டும் ஏதாவது ஒரு சில நாட்களில் இது தென்படும். சில நேரங்களில் பாதியாக தென்படும். சில நேரங்களில் வெறும் கோடு போல கூட இது தென்படும். அதனாலேயே, இதைப்பற்றி யாரும் அவ்வளவாக ஆய்வு செய்யவில்லை. ஆனால் இந்த கிரகம் தெரிந்த ஒரு சில நாட்களில் மட்டும் தான், தாங்கள் கொடுத்த பொருள் மிக அதிகமாக ஒளிர தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, நான் நடத்திய ஆய்வுகளின் படி, இந்த பொருளுக்கும், கிரகத்திற்கும் ஏதோ ஒரு பெரும் தொடர்பு உள்ளது என்பதும் அந்த கிரகம் சார்ந்த அதிர்வலைகள் அணுத் தொடர்புகள் மூலம் இந்த பொருள் தாக்கம் அடைகிறது என்பதும் தெளிவானது.

மேஜிக்கல் லேடி

இளவரசன் (சந்தேகமாக): நான் அந்த பெரோனா(Fairona) கிரகத்திற்கு பயணிக்க முடியுமா ?

வானவியல் அறிஞர் (அதிர்ச்சியாக): விண்வெளிப் பயணமா ? தங்களுக்கு என்ன ஆயிற்று இளவரசே ! நான் என்னவோ, இந்த பொருளின் தன்மை பற்றி அறிய மட்டுமே ஆவல் கொண்டீர்கள் என்று நினைத்தேன். ஆனால் தங்கள் நோக்கம் என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை.

இளவரசன் ( உறுதியாக): இதன் நோக்கம் மிகவும் முக்கியமானது. என் வாழ்க்கையின் அர்த்தமானது. நான் எப்படியாவது அந்த கிரகத்திற்கு பயணப்பட வேண்டும்.

வானவியல் அறிஞர்: நான் வெறும் வான்வெளி ஆய்வாளர். விண்வெளிப்பயணம் குறித்தெல்லாம், நான் இன்னும் பெரிதாக ஆய்வு செய்யத் தொடங்கவில்லை. தொலைநோக்கிகளால் தான் இந்த வான்வெளியை அளந்திருக்கிறேனே தவிர தொட்டுப் பார்த்து அளந்ததில்லை.

வேண்டுமானால் ஒன்று செய்யலாம். என் நண்பன் ஒருவன், இது போன்ற விண்வெளி பயணம் குறித்த ஆராய்ச்சியை வெகுகாலமாக நடத்தி வருகிறான். ஆனால் இதுவரை உருப்படியாக எந்த ஒரு கண்டுபிடிப்பையும், அவன் சமர்ப்பித்தாக எனக்கு தெரியவில்லை. அவனை வேண்டுமானால் போய் பார்க்கலாம்.

இளவரசன்: சரி ! இப்போதே கிளம்புவோம்!

காட்சி 4:

(மேசை மீது, மூன்று தேனீர் குவளைகள் புகை விட்டுக் கொண்டிருந்தன. விண்வெளிப்பயண ஆய்வாளர், வானியல் ஆய்வாளரையும் இளவரசனையும் பார்த்துக்கொண்டிருந்தான்.)

விண்வெளிப்பயண ஆய்வாளர்: பெரோனா(Fairona) கிரகத்திற்கு விண்வெளி பயணம் செய்ய வேண்டும். அதற்கு நான் உதவ வேண்டும். ம் ! நல்ல வேலைதான்!

ஆனால், விண்வெளிப் பயணம் என்பது நீங்கள் நினைப்பது போல் எளிய விஷயமில்லை. அது இன்றைய காலகட்டத்தின் நவீன அறிவியலால் கூட சாத்தியப்படாத ஒன்று. அதில் நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை ஏராளம். அதனால்தான் வெகு காலமாக ஆராய்ச்சி செய்தும், இன்னும் என்னால் உருப்படியாக ஒரு பயணக் கருவியை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.

இளவரசன்: இந்த பயணம் மிக முக்கியமானது. இதை நான் செய்தே ஆக வேண்டும்.

விண்வெளிப்பயண ஆய்வாளர் (நம்பிக்கையில்லாமல்): நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இதுவரைக்கும் கண்டுபிடித்த அளவில் வைத்திருக்கும் கருவியை கொடுத்தால்கூட, அதை உங்களால் பயன்படுத்த முடியாது. அதைப் பயன்படுத்துவதற்கு நாம் எந்த கிரகத்திற்கு பயணிக்கிறோமோ, அந்த கிரகத்தில் இருந்து வந்த ஒரு பொருள் தேவை.

(வானியல் அறிஞரும் இளவரசனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்)

விண்வெளிப்பயண ஆய்வாளர் (ஆச்சரியமாக): அப்படி என்றால் உங்களிடம் அந்த கிரகத்தில் இருந்து வந்த பொருள் இருக்கிறதா என்றால் என் வேலை மிக எளிது. நான் உருவாக்கி இருக்கும் கருவியில் பரிசோதித்து பார்க்கலாம்.

(விண்வெளிப்பயண ஆய்வாளர் உள்ளே சென்று, ஒரு கடிகாரம் போன்ற கைக்காப்பு எடுத்து வந்தான்.)

விண்வெளி பயண ஆய்வாளர் (செய்முறையுடன்): இந்த கைக்காப்பில் உள்ள பெட்டியில், அந்த பொருளை வைத்து ஆன் செய்தால், அந்தப் பொருளின் மீதான அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை அதிகரித்து, அந்த பொருளையும், இந்த காப்பை அணிந்திருக்கும் நபரையும் சேர்த்து அந்த கிரகம் இழுத்துக்கொள்ளும்.

வானியல் ஆய்வாளர் (சந்தேகமாக): இது பரிசோதிக்கப்பட்ட கருவியா ?

விண்வெளிப் பயண ஆய்வாளர் (நக்கலாக): பரிசோதனையா ? எதை வைத்து இதை பரிசோதிப்பது ? வேற்றுக்கிரக பொருளுக்கு நான் எங்கு போவேன். இன்னும் நான் இதை பரிசோதிக்கவில்லை. அதனால்தான் இந்த இளவரசனை நான் எச்சரிக்கிறேன். இந்த பயணம் மிகவும் ஆபத்தானது. இது தெரிந்தும் இதை செய்ய நீ விரும்புகிறாயா ?

இளவரசன் ( உறுதியாக): இந்தப் பயணத்தால் வரும் ஆபத்தை விட, இந்த பயணத்தின் தேவை அதிமுக்கியமானது. ஆதலால் நான் பயணம் செய்ய தயாராக உள்ளேன்.

(காப்பை கையில் மாட்டி, அந்தப் பெட்டியில் பொருளை வைத்து, ஆன் செய்தான் இளவரசன். சில நொடிகளில் அந்த பொருளின் ஈர்ப்பு விசை அதிகரித்து, இளவரசன், அந்த பொருள் இருவருமே அதிவேகமாக கிரகத்தால் இழுக்கப்பட்டார்கள்.)

காட்சி 5:

(கண் திறக்க முடியாத அளவிற்கு, ஓர் அதி மின்னல் வேக பயணம். கண்விழித்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெட்டி பெட்டியாக அறைகள் (Cabinets). சுற்றிலும் பாதுகாப்பு வளையம். ஒரு பிரமாண்டமான நுழைவாயில் சில எந்திரங்களுடன்.

இளவரசன் அந்த நுழைவாயில் அருகே சென்றான். அங்கிருந்த எந்திரம் அவனை பார்த்து பேசியது. )

எந்திரம்: நீ யார் ? உனக்கு என்ன வேண்டும் ?

(இளவரசன் தன் ஆடையில் இருந்த அந்தத் துண்டுகளை எடுத்து காண்பித்தான். எந்திரம் அவற்றை படம் பிடித்துக் கொண்டது. அவனையும்தான். தன் கோப்புகளில், அது பற்றிய விவரங்களை தேடியது. மேஜிக்கல் லேடி 349 என்கிற நபருடன் அந்த விவரங்கள் பொருந்திப் போனது. அந்த எந்திரம் மேஜிக்கல் லேடி 349 ஐ தொடர்பு கொண்டது)

எந்திரம்: உங்களைப் பார்க்க ஒரு நபர் வந்திருக்கிறார். அவர் கொண்டு வந்திருக்கும் பொருளும், அவர் புகைப்படமும் உங்கள் கோப்புகளோடு பொருந்திப் போகிறது.

மேஜிக்கல் லேடி 349 ( அவசரமாக): யாரையும் நான் இப்போது பார்க்க முடியாது ! நான் சில வேலைகளில் பிசியாக இருக்கிறேன்!

எந்திரம்: இவர் நம் பெரோனா(Fairona) ஆள் கிடையாது. இந்த நபர் பூமியில் இருந்து வந்திருக்கிறார்.

மேஜிக்கல் லேடி 349 (ஆச்சரியமாக): என்ன சொல்கிறாய் ? என்னால் நம்பவே முடியவில்லை. சரி ! உடனடியாக அவரை என் கேபினுக்கு அனுப்பு.

எந்திரம்: இதோ !

(எந்திரம் ஒரு பட்டனைத் தட்டியது. இளவரசன் நின்று கொண்டிருந்த பகுதி அப்படியே வேகமாக நகர்ந்து ஒரு கேபினை நோக்கிச் சென்றது.)

காட்சி 6

(அதிசயமான ஒரு அறை. அங்கு அவன் தேவதை போன்று ஒரு பெண்ணைப் பார்த்தான். அழகில் மட்டுமல்ல ஆடை அலங்காரங்களிலும், அவள் தேவதை போன்று தான் இருந்தாள். ஆனால், அவளை அவன் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அவன் தேடி வந்த பெண்ணும் அவள் அல்ல.)

இளவரசன் (குழப்பமாக): யார் நீங்கள் ?

மேஜிக்கல் லேடி 349 (சிரிப்புடன்): யாரென்று தெரியாத ஒருவரை தேடி, இவ்வளவு தூரம். அதுவும், ஆபத்தான விண்வெளிப்பயணம். வேடிக்கைதான் போ!

சரி அந்த உடைந்த துண்டுகளை இங்கே கொடு !

இளவரசன் (குழப்பமாக): முதலில் எனக்கு தேவை விளக்கம். அந்த உடைந்த துண்டுகளுக்கும், இந்த கிரகத்திற்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.

மேஜிக்கல் லேடி 349: அந்தப் பொருள், நான் ஒருவருக்கு கொடுத்த பரிசு. அந்த ஒருவருக்கும் உனக்கும் ஏற்பட்ட பந்தத்தால், இன்று உனக்கும் எனக்கும் சம்பந்தம். அந்தத் துண்டுகளை நீ கொடுத்தால் தான் மீதி விவரங்களை புரியும்படி சொல்ல முடியும்.

(இளவரசன் எல்லா துண்டுகளும் இருக்கும் அந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்)

(மேஜிக்கல் லேடி 349 அந்த பையிலிருந்த எல்லா துண்டுகளையும், தன் மேசைமீது கொட்டி ஒவ்வொன்றாக தன் விரல்களால் நகர்த்திக் கொண்டு இருந்தாள்.)

இளவரசன் (ஆர்வமாக): இது நீங்கள் கொடுத்த பரிசா? அப்படி என்றால் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

மேஜிக்கல் லேடி

மேஜிக்கல் லேடி 349 (புதிராக): எனக்கு எல்லாமும் தெரியாது. ஆனால் “எல்லா” வைப் பற்றி முழுமையாக தெரியும்.

இளவரசன் (ஆர்வமாக): அப்படி என்றால் ? எல்லா தான் அவள் பெயரா ?

(அவன் கேள்விக்கு பதில் சொல்லும் முன், தன்னிடமிருந்த எல்லா உடைந்து துண்டுகளையும் அருகிலிருந்த ஒளிரும் பலகைக்கு நகர்த்தினால் அந்தப்பெண். பிறகு அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள்.)

மேஜிக்கல் லேடி 349 (தீர்க்கமாக): ஆம் ! எல்லா தான் அவள் பெயர். ஆனால் அவளை பிடிக்காதவர்கள் அவளுக்கு வைத்த பெயரோ சிண்ட்ரல்லா.

(சொல்லி முடிக்கும் போது, ஒரு சொடக்கு போட்டாள் அவள். அந்த ஒளிரும் பலகையில் இருந்த எல்லா துண்டுகளும் ஒன்று சேர்ந்து ஒரு மேஜிக்கல் செருப்பாக மாறியது. இப்போது மீண்டும் பேசத் தொடங்கினாள்)

மேஜிக்கல் லேடி 349 (தன் பின்னால் இருந்த திரையை பார்த்து): எங்கள் திட்டப்படி நீங்களிருவரும் சில மாதங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டியவர்கள்.

சிண்ட்ரல்லா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இருந்த இரண்டு செருப்புகளில் ஒன்று, அவள் சித்தியால் முதலிலேயே உடைக்கப்பட்டு விட்டது. உன்னிடம் இருந்த இன்னொன்றையும் அவள் சித்தி தன் சதியால் உடைத்து துண்டுகளாக்கி விட்டாள்.

அதோடு தன் நம்பிக்கையும் உடைந்து விட்டதால், சிண்ட்ரெல்லா இன்னும் உன் நினைவோடு வேலைக்காரியாக தான் வாழ்ந்துவருகிறாள். (பின்னணியில் நடந்த காட்சிகள் ஓவியங்களாக ஓடிக்கொண்டிருந்தன. )

மேஜிக்கல் லேடி 349 (ஆச்சரியமாக): இதற்கு மேல் அவளை காப்பாற்ற, நாங்கள் மாற்றுத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நீ இங்கு வந்திருப்பது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. எப்படி இது சாத்தியமானது ?

(இளவரசன் நடந்தவற்றை விவரித்தான்)

மேஜிக்கல் லேடி 349 (வியப்பாக): அப்படி என்றால் ! உங்களுடைய இந்த version கதையில் மாயாஜாலத்தை விட, அறிவியல் தான் உங்களை சேர்க்க மெனக்கெட்டிருக்கிறது. சரி ! அறிவியலோ, மாயாஜாலமோ அது இங்கு வெறும் கருவி மட்டும் தான்.இறுதியில் வெல்ல வேண்டியது காதல் தான்.

நாங்களும் இந்த கதைக்கு சோகமான முடிவை விரும்புவதில்லை. ஏனென்றால் இது காதல் கதை ஆயிற்றே !

மேஜிக்கல் லேடி 349 (எழுந்து நின்று): சரி ! நீ தயாரா !

இளவரசன் (குழப்பமாக): எதற்கு ?

மேஜிக்கல் லேடி 349 (கிண்டலாக): எதற்கா ? உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் “சிண்ட்ரெல்லா”வை பார்ப்பதற்கு. என்னால் உன்னை அங்கே அனுப்ப முடியும். அதற்கு பிறகு அது உலகறிந்த கதை. அப்படியே அவளுடைய Fairy Godmother (மேஜிக்கல் லேடி 349) அவளை கேட்டதாகச் சொல். அப்புறம் மறக்காம “Happily Ever After” னு வீட்டு வாசல்ல போர்டு மாட்டிரு!

The End

ஒரு சிறந்த திரைக்கதையால் எந்த ஒரு பழைய கதையையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும். இதை நிரூபிக்கும் நோக்கத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் “சிண்ட்ரெல்லா கதை’’ க்கு என்னால் எழுதப்பட்ட மாதிரி திரைக்கதை வடிவமே இது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.