பணிநீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் – அரசு தரப்பு பதில் என்ன?

மருத்துவர்கள் போராட்டம்:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இந்த கிளினிக்களுக்கு 1,820 மருத்துவர்களும், 1,420 பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களும் ஓராண்டுக் கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்கள். அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே கொரோனா பேரிடர் தொடங்கியது. எனவே அந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்குப் பின்பு பல்வேறு காரணங்களினால் இந்த அம்மா மினி கிளினிக் மூடப்படும் முடிவு எடுக்கப்பட்டது.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் போராட்டம்

அந்த கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவு கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் அந்த மருத்துவர்கள் அனைவருமே பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

மருத்துவர்கள் பணிநீக்கம்:

இந்த விவகாரம் குறித்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “அம்மா மினி கிளினிக்கு வேலைக்குச் சேர்க்கப்பட்ட மருத்துவர்கள் அனைவருமே ஒரு வருட காலத்துக்குத் தற்காலிக பணி என்று எழுதிக் கொடுத்துத் தான் பணிக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படிதான், அவர்கள் அனைவருமே கடந்த மார்ச் மாதத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் ஒருவருட காலத்துக்கு என்று பணிக்குச் சேர்ந்தாலும், கொரோனா பேரிடர் சமயங்களில் அவர்கள் செய்த பணியை இந்த அரசு கருத்தில் கொண்டிருக்கிறது.

மா.சுப்பிரமணியன்

வரும்காலங்களில் அந்த மருத்துவர்களுக்குத் தான் பணியில் முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசியுள்ளோம். முன்பு வேலை பார்த்த 1,820 மருத்துவர்களில் கடைசியாக வேலைபார்த்து எத்தனை பேர் என்ற பெயர் பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது.

மருத்துவர்கள் போராட்டம்

அவர்கள் அனைவர்க்கும் பணியாற்றியதற்கான கடிதம் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் தயார்செய்யப்பட்டு, பணியில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.