பிலிப்பைன்ஸில் வெள்ளப் பெருக்கு: 58 பேர் உயிரிழப்பு; பலர் மாயம்

மணிலா: பிலிப்பைன்ஸில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 58 பேர் பலியாகினர்; வெள்ளத்தில் சிக்கிய பலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பேபே நகரம் உள்ளிட்ட ஆறு நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இதுவரை 58 பேர் பலியாகினர்; 27 பேர் மாயமாகி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக மீட்புப் பணியில் தாமதம் உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக மீட்புப் பணிக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீட்புப் பணி குழு தளபதி நோயில் கூறும்போது “துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த பயங்கரமான இயற்கைப் பேரிடரால் நாங்கள் கவலையடைந்துள்ளோம்” என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்குகின்றன. இதன் காரணமாக கனமழையும்,வெள்ளமும் பிலிப்பைன்ஸ் பேரிடர் மேலாண்மை எதிர்கொள்ளும் வருடாந்திர நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

எனினும், காலநிலை மாற்றம் காரணமாக சமீப ஆண்டுகளில் பிலிப்பைன்ஸில் புயல்கள் உருவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஒரு நாளில் பெய்யக்கூடிய மழையின் அளவு அதிகரித்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.