25 தொகுதிகளைக் குறிவைக்கும் தமிழக பாஜக… அண்ணாமலையின் 2024 இலக்குதான் என்ன?

தமிழக பாஜக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூரில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்குத்தான் தமிழக மக்கள் வாக்களிக்கவுள்ளனர். அந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறுவது உறுதி. இந்த வெற்றி கிடைத்தால் கண்டிப்பாக மத்தியில் போராடி ஐந்து மத்திய அமைச்சர்களைப் பெற்றுத் தருவது என்னுடைய பொறுப்பு.

அண்ணாமலை

ஒருவேளை திமுக வெற்றிபெற்றால் ஆண்டுக்கு 24 விமான டிக்கெட், இலவச தொலைபேசி, இரண்டு உதவியாளருக்குச் சம்பளம் மட்டுமே கிடைக்கும். இப்போது தமிழக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுமட்டும்தான் கிடைக்கிறது. வேறு எதுவும் கிடைக்காது. வரும் தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்து வெற்றிபெறவைத்தல், 50 ஆயிரம் கோடி ரூபாயில் நலத் திட்டங்கள் கொண்டுவரப்படும். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் பேசினாலும் வேலை நடக்காது. வரக்கூடிய தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்று பேசியிருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருந்தது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 12,838 இடங்களில், 5,480 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், 308 இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தனர். சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜக அதிமுக கூட்டணியிலிருந்தது என்றாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தனித்து தேர்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக-வினர்

தமிழக பாஜக-வில் அண்ணாமலை பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். சமீபத்தில்கூட தேர்தல் சமயத்தில் சரிவர வேலை பார்க்காத நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை பணியமர்த்தும் வேலையைச் செய்துவருகிறார். இதற்கான உத்தரவை டெல்லியிலும் பெற்றுவிட்டார். அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் கட்சி அலுவலகங்களை உருவாக்கி, கட்சியை பலப்படுத்த அண்ணாமலை முயற்சி செய்வதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை!

இது குறித்து பாஜக-வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அவர் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக இப்போதிருந்தே தேர்தல் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். வரும் 2024-ம் தேர்தலில் ஈரோடு அல்லது கரூர் தொகுதியில் போட்டியிடுவார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக 2024 -ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கு இப்போதே வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதோடு, வெற்றிபெற்றால் கண்டிப்பாக மத்திய அமைச்சர் பதவியை வாங்க வேண்டும் என்பதற்காக டெல்லியில் காய்நகர்த்தும் வேலையையும் செய்துவருகிறார். இங்கு அண்ணாமலை வெற்றிபெற்று மேலே பாஜக ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற வாய்ப்புகள் அதிகம்” என்று கூறினார்கள்.

அண்ணாமலை சொல்வதுபோல் 25 தொகுதிகளில் பாஜக-வுக்கு வெற்றி சாத்தியமா என அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசியபோது, “தமிழகத்தில் பாஜக-வின் வெற்றி திராவிடக் கட்சிகளின் கூட்டணியின் உதவியுடன்தான் சாத்தியப்படும். அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில், பாஜக-வுக்கு அத்தனை இடங்களில் அதிமுக கூட்டணியில் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். அதனால் 2024-ல் அண்ணாமலை சொல்வது சாத்தியம் இல்லாதது. கட்சியினரை உற்சாகப்படுத்த இது போன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள்தான்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.