கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், இத்திருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த விழாவை ஒட்டி ஒன்றாகச் சங்கமிக்கும் திருநங்கைகள், தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்திருப்பதோடு, புத்துணர்வைப் பெறுகின்றனர். மேலும், திருநங்கைகளின் பெருமையை மற்றவர்களை உணரச் செய்திடும் திருநாளாகவும் இந்தத் திருவிழா திகழ்கிறது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த இத்திருவிழா, கடந்த 4ம் தேதி சாகை வார்த்தலுடன் ஆரம்பமானது. கூத்தாண்டவரை மனதில் நிறுத்தித் திருநங்கைகள் பலரும் கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக்கொள்ளும் முக்கிய நிகழ்வு, திருவிழாவின் 16வது நாளான இன்று நடைபெற்றது.
இவ்வாறு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வதற்குப் பின்னால், புராணக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘மகாபாரத குருஷேத்ர போரில், பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சகல லட்சணங்களும் பொருந்திய ஆண்மகன் ஒருவனை பலியிடவேண்டும் என்ற நிலை வருகிறது. அதற்கு, அர்ஜுனன் – நாக கன்னிகையின் புத்திரன் அரவான் முன்வருகிறான். ஆனால், திருமணமான ஒருவனைத்தான் பலிகொடுக்க முடியும் என்பது சாஸ்திரம். ஆகவே, அரவான் சிறிது நேரத்தில் பலி கொடுக்கப்பட்டுவிடுவான் என்பதினால் எந்தப் பெண்ணும் அவனைத் திருமணம் செய்துக்கொள்ள முன்வரவில்லை.
இந்நிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அவனை மணந்துகொண்டார். எனவே, ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சமானவர்களே திருநங்கைகள்’ என்று சொல்லப்படுகிறது.
ஆகவே, அரவானின் திருக்கண் திறக்கப்படும் இன்றைய தினம் அரவானை கணவனாக எண்ணிக்கொண்டு, இவ்வாறு தாலிக் கட்டிக்கொள்கின்றனர் திருநங்கைகள்.
சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின் நிகழ்வாக இன்றைய தினம் ஏராளமாக திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து, அர்ச்சகர் கையால் தாலி கட்டிக்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என கூவாகம் களைகட்டும். நாளைக் காலை நேரத்தில், அரவானுடைய சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படும். அப்போது, திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழும் சடங்கு நடைபெறும்.
அரவானின் சிரம் துண்டிக்கப்பட்டவுடன், திருநங்கைகள் விதவை கோலம் பூணுவர். அதன் தொடர்ச்சியாக, தர்மரின் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.
இரண்டு வருடங்கள் கழித்து நடைபெறும் இந்தத் திருவிழா பலரது எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.