ஆயுள் தோஷம் போக்கிடும் சப்தஸ்தான பல்லக்கு விழா… சிறப்புகள் என்னென்ன?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநீலக்குடி திருத்தலத்தில் ஸ்ரீ அழகாம்பிகை சமேத ஸ்ரீ நீலகண்டேஸ்வரர்  அருள்பாலிக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. இது திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலமாகும்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தின் கொடிய வெம்மையைத் தாளாது, பிரபஞ்சமே இருண்டு ஸ்தம்பித்தபோது, அனைவரையும் காக்கும் பொருட்டு சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தினை உண்டார். கொடுமையான விஷமானது உட்செல்லாதபடி அன்னையானவள் பெருமானின் கண்டத்தை அழுத்தித் தடுத்தாள்.  

சப்தஸ்தான பல்லக்கு விழா

ஆயினும், ஆலகாலத்தின் அதி வீரியத் தன்மை காரணமாக பெருமான் சுயநினைவிழக்க நேரிட்டது. விஷத்தின் வெம்மையைக் குறைத்திட, மூலிகைகளால் ஆன தைலத்தினை இறைவனின் திருமுடியி்ல் வைத்து, தமது திருக்கரங்களால் தேய்த்தவுடன், இறைவனார் சுய நினைவுபெற்று மீண்டெழுந்தார்.

இப்புராண நிகழ்வு இத்தலத்தில் நடந்தது என்ற ஐதிகத்தின் விளைவாக சுவாமிக்கு ‘நீலகண்டர்’ என்ற நாமமும், இத்தலத்திற்கு ‘நீலக்குடி’ என்ற நாமமும் ஏற்பட்டது.

இன்றும் இத்தலத்து மூலவர்க்கு மாதந்தோறும் சித்திரை நட்சத்திரத்தில் தைலாபிஷேகம் செய்வது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்யப்படும் தைலாபிஷேக எண்ணையில்  ஒருதுளிகூட வெளியில் சிந்தாமல் அப்படியே மூலவர் திருமேனியில் சுவரிவிடுவது அறிவிற்கு அப்பாற்பட்ட அதிசயம்.

இதனால் இவருக்கு ‘தைலாப்பியங்கேசர்’ என்ற நாமமும் உண்டு. இத்தகைய சிறப்புமிக்கதலத்தில் திருக்கடவூரில் காலசம்ஹாரம் நிகழ்ந்த பிறகு சிரஞ்சீவிப் பதம்பெற்ற மார்க்கண்டேயருக்குப் பெருமான் ஏழு நிலைகளில் காட்சி அளித்தார். அதன் நன்றியைப்  போற்றும் விதமாக ஏழு ஊர்கள் வலம் வந்து இத்தலத்து இறைவனை மார்க்கண்டேயர் வணங்கினார் என்பது தல வரலாறு.

சப்தஸ்தான பல்லக்கு விழா

இந்த ஐதிகத்தினை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும்  சித்திரைப் பெருவிழாவின் போது, இவ்வாலயத்து சுவாமி, அம்பாள் பல்லக்குடன் சுற்றியுள்ள இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய ஆறு தலங்களிலும் எழுந்தருளச் செய்யப்படுகிறார். சுவாமி, அம்பாள் பல்லக்கிற்கு முன்பு தொழுதிடும் பாவனையில் மார்க்கண்டேயர் சிறு சிவிகையில் பவனி வருவார்.   

இப்பல்லக்கு பவனி இறுதியாக திருநீலக்குடியில் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்த நிகழ்வானது ‘ஏழூர் பல்லக்கு’ என்ற பெயரில், சப்தஸ்தான விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்க்கண்டேயர் சிவபெருமானை பூஜித்த தலங்கள் ஏராளம். ஆயினும் சிரஞ்சீவிப் பதத்தினை அடைந்த தலம் இதுவே.  இதனைப் போற்றும் விதமாக மார்க்கண்டேயர் இத்தலத்து ஈசருக்கு சித்திரைப் பெருவிழாவினை எடுப்பித்துப் போற்றினார். அதன்படி இந்தாண்டு சப்தஸ்தான பல்லக்கு விழா நேற்று (18.04.2022) நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆயுள் தோஷம் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் இத்தலத்து இறையை வணங்குவதினாலும், இந்த ஏழூர் பல்லக்கு நிகழ்வினைத் தரிசிப்பதினாலும் தோஷம் அகன்று மனசஞ்சலங்கள் நீங்கப் பெறுவது கண்கூடு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.