புதுப் பொலிவுடன் மெரினா நீச்சல் குளம்: கோடைகால பயிற்சி முகாமுக்கு போறீங்களா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் சந்தித்த கொரோனா பெருந்தொற்று காரணமாக, பல பொது பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டிருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த இடைவெளிக்கு பிறகு பல பொழுதுபோக்கு தளங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி மெரினாவில் நீச்சல் குளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

இதைப்பற்றி தமிழ் இந்தியன் எஸ்பிரஸிடம் மேலாளர் ரவி கூறியதாவது:

“ஏப்ரல் 1-ஆம் தேதி நீச்சல் குளத்தை திறந்தபின்பு, மக்களின் வரவேற்பு ஆரவாரமாக இருக்கிறது, ஏறக்குறைய தினமும் 300 பேர் வருகைபுரிகிறார்கள்.  பன்னிரண்டு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு 30 ரூபாயாகவும், அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு 50 ரூபாயாகவும் நுழைவுசீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மெரினா நீச்சல் குளத்தின் மேலாளர் ரவி

நீச்சல் குளம் மூடப்பட்ட காலத்தில் சில அடிப்படை பராமரிப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் ஆகியவை செய்துள்ளோம். உடைந்த ஓடுகள் அனைத்தும் சரி செய்வது, சில இடங்களில் ஓவியங்கள் வரைவது, விளக்குகள் அதிகரிப்பது போன்ற மாற்றங்களும் கொண்டுவந்திருக்கிறோம்.

பெருந்தொற்று பரவலுக்கு பின்பு சுகாதாரத்திற்கு அதிக கவனம் செலுத்தி மக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்கிறோம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீச்சல் குளத்தின் நீரை சுத்திகரிப்பது, நீச்சல் குளத்தின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது போன்ற வேளைகளில் தீவிர ஈடுபாடுடன் செயல்படுகிறோம்.

ஐந்து வருடங்களாக பராமரிக்கப்படும் 100 மீட்டர் நீளமுள்ள மெரினா நீச்சல் குளத்தில், தொற்றுநோய்க்கு முன்பு தினசரி 2000 பேர் வந்து கொண்டிருந்தனர். தற்போது கோடை சீசன் தொடங்கும் நிலையில் இது அதிகரிக்க உள்ளது. 

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், 7 முதல் 8 மணி வரையிலும் மற்றும் மாலை 5 முதல் 6 மணி வரையிலும், 6 முதல் 7 மணி வரையிலும் நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்கப்படும். 15 நாட்களுக்கு நடக்கும் இந்த கோடைக்கால முகாமின் விலை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1500 ரூபாய், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய்.” என்று கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.