ஜஹாங்கிர்புரி விவகாரம்: பாஜக அரசுக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்!

ஜஹாங்கிர்புரியில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள
ஜஹாங்கிர்புரி
என்ற இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு தரப்புக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில், 8 போலீசார் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இதுவரை சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லி வடக்கு மாநகராட்சி மேயருக்கு எழுதிய கடிதத்தில், கலவரம் நடந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்து புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றத் துவங்கினர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதித்ததுடன், தற்போதைய நிலைமையை தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனாலும், சில மணி நேரம் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜஹாங்கிர்புரி பகுதியின் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதை மதிக்காமல் தொடர்ந்து புல்டோசர்களை கொண்டு ஏழை மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூரையாடும் பாசிச பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. அதை மறைமுகமாக ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.