மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் குறித்து புகார் அளிக்க புதிய வசதி! சென்னை மாநகராட்சி அறிமுகம்.!

மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராடை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த மழைநீர் வடிகால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மழைநீர் வடிகால்கள் மழைக்காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு ரூ.5,000/- அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ.25,000/- அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கடந்த 4-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 105 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.74,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.