பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால் மட்டும் போதுமா? – வெயிலும் மனிதமும்!

“இது ஏப்ரல் தான்… இப்பவே இந்த வெயிலுனா… அடுத்த மாசம்… ” என்று விழிப்பிதுங்காத ஆட்களே இருக்க முடியாது. அப்படி பாரபட்சம் பாராமல் நாளுக்கு நாள் பொளந்துக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்த வெயில்.

நாட்டில் கோடைக்காலம் மார்ச் மாதம் துவங்கி ஜுன் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும். தென் மேற்கு பருவ மழை துவங்கிய பின் கோடைக்காலம் முடிவடைவது வழக்கம்.

இந்நிலையில் இம்மாதம் முதல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், ஜம்மு – காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலும் உள் மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தான் வெயில் அதிகமாக இருக்கும் ஆனால் தற்போது சூழலில் பெட்ரோல் விலையைப் போல, ஐபிஎல் அணிகளைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் போட்டி போட்டுக் கொண்டு வெயில் கொளுத்துகிறது.

Representational Image

இன்று என்னா வெயிலு… இப்படி வெயில் அடிச்சா மனுஷன் எப்படிப்பா வாழ்வது என்று புலம்பினாலும் ஒரு காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி மகிழ தவமாய் தவமிருந்து காத்துக் கொண்டிருந்தது கோடை காலத்திற்கு தான். ஒவ்வொரு 90’ஸ் கிட்ஸ்களின் சொர்க்கமே மே மாதம் தான். முழு ஆண்டு பரீட்சை முடிந்து அந்த ரெண்டு மாசம் விடுமுறை தான் குழந்தைகளின் சொர்க்கம். அதிலும் மே மாதம்… ஸ்பெஷல் மாதம்..!

வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களோடு பம்பரம், கிட்டி புல், தென்னை மட்டை கிரிக்கெட், wwe கார்டு, கிரிக்கெட் கார்ட், திருட்டு மாங்கா, கிணற்றுக் குளியல் , பாட்டி வீடு, ஊர்த் திருவிழா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியையும் மறக்க முடியாத தாக்கியதே இந்த வெயில் தான். அதெல்லாம் ஒரு காலம்..!

“வெயிலோடு விளையாடி வெயிலோடு

உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம்

போட்டோமே…”

“பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்

ஓட்டம் போட்டு திரிஞ்சோம்

வெயிலைத் தவிர வாழ்க்கையில் வேற என்ன அறிஞ்சோம்..”

என்ற நா.முத்துக்குமாரின் வரியையும், ஜி.வி.பிரகாஷின் இசையையும் கேட்க இன்று குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் எதார்த்தம் என்னமோ “அந்த ஃபேனை பன்னிரெண்டாம் நம்பர்ல வை டி மாலா…” என்ற வடிவேலுவின் நிலைமை தான்.

காலநிலை, தட்பவெப்ப நிலை நிறைய மாறிவிட்டது. ஒரு காலத்தில் கிராமத்தில் நாள் முழுவதும் வயலில் சளிக்காமல் வேலை செய்தவர்கள் கூட இன்று வீட்டைவிட்டு வெளியே வரவே தயங்குகிறார்கள்.

ப்ளாட் போட்டு விற்பனை செய்வதற்கு, அபார்ட்மெண்ட் கட்டுவதற்கு, சாலை விரிவாக்கம் செய்வதற்கு என எந்த அளவிற்கு மரங்களை அழிக்க முடியுமோ அனைத்துக் காரணத்திற்கும் மரங்களை வெட்டி விடுகின்றனர்.

Representational Image

இதற்கிடையில் கடந்த இரண்டு வருடங்களாக உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா என்னும் பெருந்தொற்று நோய் அனைவரையும் வீட்டில் அடைத்து விட்டது. பற்றாக்குறைக்கு ஆன்லைன் கிளாஸ் எனச் சொல்லி குழந்தைகளின் கையிலும் வலுக்கட்டாயமாக மொபைல் போனை திணித்து விட்டோம். எல்லோர் கையிலும் எந்நேரமும் மொபைல் தான். வெயிலோ மழையோ யாரும் தற்போது வீட்டை விட்டு வெளியில் வரும் எண்ணம் இல்லை.

காலையிலேயே வீட்டை விட்டு ஓடி நாள் முழுக்க விளையாடி வியர்வை வாசத்தோடு வீட்டிற்கு வந்து இரவெல்லாம் அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் குழந்தைகளின் காலம் மலையேறிவிட்டது.

இப்படி வெயில் அடித்தால் எப்படி வெளியில் செல்வதென வீட்டிலிருந்தே புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

நாள் முழுவதும் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருப்பவர்களுக்கே இந்த வெயில் இப்படி ஒரு கொடுமை என்றால் நாள் முழுக்க வெயிலிலே உழைக்கும் விவசாயிகளுக்கு, கட்டிட தொழிலாளிகளுக்கு, கூலி வேலை செய்வோருக்கு, வியாபாரிகளுக்கு அப்பப்பா நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது..

தினம் தினம் எத்தனையோ தொழிலாளர்கள் வெயில், மழை, பனி, குளிர் என பாராமல் தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கிறார்கள். அதில் சிலரை நாம் தேடிச் செல்ல நேரிடும். சிலர் நம் வீடு தேடி வருவார்கள்.

அதுபோல இந்த கடுமையான வெயில் காலத்தில் நம் வீடு தேடி வரும் தொழிலாளர்கள், வியாபாரிகளான வீடு வீடாக பால் போடுபவர், சைக்கிளில் பாத்திரம் விற்பவர், வண்டியில் புடவை வியாபாரம் செய்பவர், தள்ளு வண்டியில் காய் விற்பவர், கூடையில் பூ வியாபாரம் என நம்மைத் தேடி, நம் வீடு தேடி வரும் வியாபாரிகளிடம் நாம் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களுக்கு ஒதுங்க கொஞ்சம் நிழலும், குடிக்க கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தாலே போதும்.

Representational Image

நாம் பொதுவாக ஒவ்வொரு வெயில் காலங்களிலும் குருவிக்கு தண்ணீர் வைக்க வேண்டும் பறவைகளை பாதுகாக்க வேண்டும் என வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைப்போம். பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் இருக்கும் அக்கறையும் பாசமும் சில நேரங்களில் நம்மோடு இருக்கும் சக மனிதர்களிடத்தில் காட்ட மறந்துவிடுகிறோம். மறுத்துவிடுகிறோம். ஒவ்வொருவரும் நம் வீட்டிற்கு வெளியில் ஒரு பானையிலோ, குடத்திலோ கொஞ்சம் தண்ணீர் வைத்தால் பாதசாரிகளும், தொழிலாளிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவார்கள். தாகம் தணிப்பார்கள்.

ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களைவிட நாம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம். நாம் மட்டும் நலமாக இருந்தால் போதாது நம் சமுகமும் நலமாக இருக்க வேண்டும்… நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை செய்வோம் வெயிலை மனிதத்தால் வெல்வோம்..!

-கோ.ராஜசேகர், தருமபுரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.