மின் தேவை அதிகரிப்பால் பல மாநிலங்களில் மின் தடை| Dinamalar

புதுடில்லி,-கோடை வெயில் சுட்டெரிப்பதால், திடீரென மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில பகுதிகளில் எட்டு மணி நேரம் வரை மின் தடை உள்ளதாக கூறப்படுகிறது.நாடு முழுதும் கோடை வெயில் தீவிரமடைந்துஉள்ளது. பல மாநிலங்களில், 40 டிகிரிசெல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. பற்றாக்குறைஇந்நிலையில், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில பகுதிகளில், எட்டு மணி நேரம் வரை மின் தடை உள்ளதாக கூறப்படுகிறது.நாட்டின் மின் உற்பத்தியில், 70 சதவீதம் நிலக்கரி வாயிலாகவே செய்யப்படுகிறது.இந்நிலையில், நிலக்கரி சுரங்கங்கள் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாமல் திண்டாடுவதாக கூறப்படுகிறது. அதோடு, நிலக்கரியை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை.

இதனால், தேவையை விட குறைந்த அளவுக்கே மின் உற்பத்தி உள்ளதால், இந்த திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அடுத்த சில நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்காவிட்டால், கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என தொழில் துறையினர் கூறியுள்ளனர்.புள்ளி விபரம்’நாட்டில், 150 அனல் மின் நிலையங்களில், 81ல் நிலக்கரி கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது’ என, மத்திய மின்சார ஆணைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அனைத்திந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:நாட்டின், 12 மாநிலங்களில், குறைந்த அளவே நிலக்கரி உள்ளது. அதனால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இம்மாதத்தின், முதல் 15 நாட்களில் மட்டும், மின்சாரத்தின் தேவை, 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.ஆனால், ‘நிலக்கரிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. மாநிலங்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டு வருகிறது.

மின்சாரத்தின் தேவை திடீரென உயர்ந்துள்ளதால், சில மாநிலங்களில் மின் தட்டுப்பாடு உள்ளது. இது சரி செய்யப்படும்’ என மத்திய அரசு கூறியுள்ளது.இறக்குமதி எவ்வளவு?மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு உள்ளது. இதை சமாளிக்கும் வகையில், மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 1,000 கோடி கிலோ நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நிலக்கரியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளிலும், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.தற்போது, போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லாததால், நாட்டின் மிகப் பெரிய தொழில் மாநிலங்களான மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.