`திரைத்துறை பக்கம் திரும்பும் பாஜக'- 2024க்கு முன்பாக பாஜகவில் சங்கமிக்கும் தமிழ் நட்சத்திரங்கள்?!

கடந்த காலங்களில் குஷ்பு, ராதாரவி, என திரைத்துரையில் பிரபலமானவர்கள் பலரும் சமீபத்தில் பாஜகவின் முகங்களாக மாறினர். இந்த சூழலில்தான் சில தினங்களுக்கு முன்பு, இளையராஜா மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசினார். அந்த கருத்தை தான் பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதே போலவே சென்னை கமலாலயத்திற்கு புத்தக வெளியீட்டுக்குச் சென்ற நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பாஜக விற்கு பக்கபலமான கருத்தை சொல்ல அடுத்த பரபரப்பு கிளம்பியது. அதன் பிறகு தான் பேசிய சில விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படதாக வீடியோ பதிவு ஒன்றையும் பாக்யராஜ் வெளியிட்டார். இந்த சம்பவங்களுக்கு எல்லாம் பின்னணியில் பாஜக இல்லாமல் இல்லை. ஆக்கப்பூர்வ அரசியல், அதிரடி அரசியல் என பாஜகவின் அரசியல் வியூகங்கள் இப்போது திரைத்துறை பக்கம் திரும்பி இருப்பது பலரையும் யோசிக்கவைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினை தமிழகத்தில் வளர்த்திட வேண்டும் என்பதோடு, அந்தக் கட்சிக்கு என தனியாக வலுவான வாக்குவங்கியை உருவாக்கிட வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட காலமாகவே டெல்லி தலைமைக்கு இருக்கிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கேரளா, தமிழ்நாடு என இரண்டு தென் இந்திய மாநிலங்களிலும் பாஜக-வை வளர்க்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பாஜக அரசு செய்துவருகிறது.

குஷ்பு

முதலில் தமிழகத்தில் அ.தி.மு,க , திமுக உள்ளிட்ட கட்சிகளில் ஓரம்கட்டப்பட்டவர்களை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது.அந்த வகையில் அ.தி.மு.க-விலிருந்து நயினார் நாகேந்திரன், தி.மு.க விலிருந்து வி.பி.துரைசாமி போன்றவர்கள் பாஜக முகாம் பக்கம் தாவினார்கள். இதன்பிறகு கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவிற்கு பிரசார முகங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தை கையில் எடுத்தனர். ஏற்கெனவே அ.தி.மு.க வில் அதிருப்தியிலிருந்த ராதாரவி, காங்கிரஸ் கட்சி தலைமைமீது கடுப்பில் இருந்த நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை பாஜக வின் பக்கம் கொண்டுவந்தனர். குறிப்பாக குஷ்பு வை பாஜகவின் சட்டமன்ற வேட்பாளராகவும் களத்தில் இறக்கினார்கள். அப்போதே பாஜக பக்கம் மேலும் பல திரைத்துறையினர் வருவார்கள் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரையால் கடந்த ஒருவாராமாக பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் தமிழகத்தில் மூத்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது “மோடியை குறைகூறுபவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று பேசியது பெரும் சர்சையானது. இதன்பிறகு பாக்யராஜ் தரப்பில் மன்னிப்பு கோரினாலும், இந்த விவகாரம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

இயக்குநர் பாக்யராஜ்

பாஜக தரப்பில் இதுகுறித்து பேசினால் “இளையராஜாவை நாங்கள் யாருக்கும் மோடிக்கு ஆதரவாக எழுத சொல்லவில்லை.அவருடைய கருத்தை அவர்வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நடிகர் பாக்யராஜை மோடியின் சாதனை குறித்த புத்தக வெளியிட்டு விழாவுக்கு வாருங்கள் என்று சொல்லித்தான் அழைப்பு கொடுத்தோம். அந்த நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்கும் நபர்கள் குறித்த விவரங்களையும் அவரிடம் சொல்லியிருந்தோம்.மோடி மீதான பாசத்தில் அவர் அப்படி பேசியிருக்கிறார். பிறகு கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.உண்மையில் பாஜக வில் திரைத்துறையினர் பலரையும் உள்ளே கொண்டுவரும் வேலைகள் நடக்கிறது. அது கட்சியை பலப்படுத்த மட்டுல்ல, கட்சியின் பிரசார முகத்திற்கும் எதிர்காலத்தில் இது பயன்படும்”என்கிறார்கள்.

ஏற்கெனவே சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டவர்கள் பாஜகவில் உள்ள நிலையில், மேலும் இரண்டு தயாரிப்பாளர்கள் பாஜக பக்கம் நெருக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. அதே போல் மூத்த நடிகர் ஒருவர் பலகட்சிகளோடு கைகோத்துக் களமாடியவர் இனி பாஜகவே போதும் எனகிற மனநிலைக்கு வந்துவிட்டாராம். இவரும் விரைவில் பாஜகவில் ஐக்கியமாக இருக்கிறார்.இவர்களைத் தவிர பெண் திரையுலக பிரமுகர்கள் சிலரையும் பாஜக பக்கம் கொண்டுவர நினைக்கிற தமிழக பாஜக தலைமை.

இளையராஜா, பாக்யராஜ்

திரையுலகை கையில் எடுப்பதன் மூலம் எந்த கருத்துக்களையும் எளிதாக மக்களிடம் கொண்டுசெல்ல ஒருவாய்ப்பாக உள்ளது. இளையராஜா முதல் பாக்யராஜ் சொன்னது வரை இதற்கு ஒரு சாம்பிள் என்று கூலாக சொல்கிறார்கள் பாஜகவினர். இளையராஜாவுக்கு அளிக்கப்படும் சலுகையை வைத்தே எதிர்காலத்தில் பாஜகவின் பக்கம் திரையுலகினர் திரும்ப அதிக வாய்புள்ளது என்கிறார்கள். கேரள திரையுலகிலும் விரைவில் இதுபோன்ற திரையுலக நபர்களை கட்சிக்குள் கொண்டுவரும்வேலைகளும் நடந்துவருகிறது. இரண்டு மாநிலத்திலும் 2024-க்கு முன்பாக பாஜக பலம்பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளது பாஜக. அதற்கு திரையுலகையும் ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளது” என்கிறார்கள் பாஜகவினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.