தோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி : மும்பைக்கு 7-வது தோல்வி..!!

மும்பை,
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி  2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.  தொடர்ந்து ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் போல்டானார். இதனால் முதல் ஓவரிலே மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர்.
தொடர்ந்து 2-வது ஓவரை வீச வந்த முகேஷ், மும்பை அணியின் அதிரடி வீரர் ப்ரீவிசை 4 ரன்களில் வெளியேற்றினார். இதனால் மும்பை அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறியது.
பின்னர் சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சாண்ட்னர் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹ்ரித்திக் தனது பங்கிற்கு 25 ரன்கள் குவித்து வெளியேறினார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கிய பொல்லார்ட், தீக்சனா பந்தில் துபே-யிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ஒரு முனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் டக் அவுட்டாகி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்களில் டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
சிறப்பாக விளையாடி வந்த உத்தப்பா 30 ரன்களில் உனட்கட் பந்துவீச்சில் வெளியேற அவரை தொடர்ந்து ராயுடு 40 ரன்களில் வெளியேறினார்.
போட்டியின் பரபரப்பான சூழ்நிலையில் களமிறங்கிய அணியின் கேப்டன் ஜடேஜா 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 
பின்னர் டோனி – பிரிட்டோரியஸ் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் பிரிட்டோரியஸ்  உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார்.
இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட டோனி சிக்சர் அடித்தார். 4-வது பந்தில் பவுண்டரியை விரட்டினார் டோனி. 5-வது பந்தில் டோனி 2 ரன்கள் எடுக்க இறுதி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி பந்தில் பவுண்டரி விரட்டிய டோனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.