வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை100 சதவீதம் எண்ணக் கோரி ஜனநாயகசீர்திருத்த சங்கம், அபய்பக்சந்த், அருண்குமார் அகர்வால் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு 3 மனுக்களையும் ஒரே வழக்காக விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். மின்னணு நடைமுறைக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், ‘ஒவ்வொரு தேர்தலின்போதும் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் குறித்து திட்டமிட்டு பிரச்சினை எழுப்பப்படுகிறது. இந்தஇயந்திரங்களில் எவ்வித முறைகேடும் செய்ய முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள் கடந்த 18-ம்தேதி முடிந்தது. மின்னணு வாக்குப்பதிவு முறையின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து நீதிபதிகளிடம் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் கடந்த 24-ம் தேதி விளக்கம் அளித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ்கன்னா, தீபாங்கர் தத்தா நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் கூறியுள்ளதாவது: தேர்தல் நடைமுறைகளில் கண்மூடித்தனமாக சந்தேகம் எழுப்பக்கூடாது. அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதுமிகவும் கடினம். அதில் செல்லாதவாக்குகள் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தவிர, மின்னணு இயந்திர நடைமுறையால் ஒரு நிமிடத்துக்கு 4 வாக்குகள் பதிவாகின்றன. வாக்கு எண்ணிக்கையும் விரைவாக நடைபெறுகிறது. எனவே, வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்ற கோரிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம்.

தற்போது ஒரு சட்டப்பேரவை தொகுதியில் விவிபாட் ஒப்புகை சீட்டுகள் 5 சதவீதம் அளவுக்கு எண்ணப்படுகின்றன. இந்த நடைமுறையை தொடரலாம். எனவே, விவிபாட் ஒப்புகைசீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று கோருவதையும் முழுமையாக நிராகரிக்கிறோம்.

வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு, சின்னம்பதிவேற்றும் கருவிகளை (எஸ்எல்யு) வேட்பாளர்கள் அல்லது முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களுடன் எஸ்எல்யு கருவிகளையும் 45 நாட்கள் பாதுகாப்புஅறையில் (ஸ்ட்ராங் ரூம்) பாதுகாக்க வேண்டும்.

வேட்பாளர்கள் புகார் அளிக்கலாம்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கக்கூடும் என்றுவேட்பாளர்களுக்கு சந்தேகம் எழுந்தால் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு 7 நாட்களுக்குள், 2, 3-வதுஇடம்பிடித்த வேட்பாளர்கள் ஆணையத்திடம் புகார் அளிக்கலாம். அந்த வாக்குச்சாவடியின் எஸ்எல்யு,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தை, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் பொறியாளர்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற வேண்டும். இதற்கான முழு செலவையும் புகார் அளிக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். முறைகேடு உறுதி செய்யப்பட்டால், தொகையை திருப்பி தரவேண்டும்.

விவிபாட் ஒப்புகை சீட்டு சிறியதாக இருப்பதால் எண்ணுவது கடினம்என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சீட்டுகளை எண்ண தனியாக மின்னணு இயந்திரம் தயாரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தல் நடத்தக் கோருவதன் உண்மையான நோக்கம் என்ன என்று சந்தேகம் எழுகிறது. தேர்தல் சீர்திருத்தம் உட்படபல்வேறு துறைகளில் இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது. ஆனால், ஒரு தரப்பினர் நாட்டின் வளர்ச்சி, சீர்திருத்தங்களை சீர்குலைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும். மக்கள், நீதித் துறை,மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து ஜனநாயகத்தை காக்க வேண்டும். ஒற்றுமை, நல்லிணக்கம், நம்பிக்கை, வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கசெய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 100 சதவீதம் நம்பகத்தன்மை யானது என்று தொடர்ந்து கூறி வருகிறோம். செயல்விளக்கமும் அளிக்கிறோம். ஆனாலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரச்சினை எழுப்பப்படுகிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் 40-க்கும்மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு,அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன’’ என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்எல்யூ என்றால் என்ன?: வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தை அழுத்தும்போது, அந்த வேட்பாளரின் பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்களை விவிபாட் இயந்திரம் துண்டுச்சீட்டில் அச்சிடும். இதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கு ஏற்ப வேட்பாளரின் பெயர்கள், சின்னங்களை விவிபாட் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விவிபாட் இயந்திரத்தில் சின்னங்களை பதிவேற்றும் சாதனம்தான் எஸ்எல்யூ (Symbol Loading Unit).

முதலில் கணினி மூலம் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் உள்ளிட்ட விவரங்கள் எஸ்எல்யூக்கு அனுப்பப்படும். பிறகு,எஸ்எல்யூ மூலம் விவிபாடில் அவை பதிவேற்றப்பட்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். பதிவேற்றம் முடிந்ததும், அதில் இருந்து எஸ்எல்யூ சாதனம் நீக்கப்பட்டுவிடும். அதனால், வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் எஸ்எல்யூ சாதனத்தை பார்க்க முடியாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.