“பிரசாந்த் கிஷோர் அனைத்து கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பார்!" – பாஜக எம்.பி தாக்கு

தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு, 2024 தேர்தல் வியூகம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை, சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட குழு ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து, கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கும் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைந்துவிட்டதாக பாஜக உள்ளிட்டக் கட்சிகள் கூறிவந்தன.

பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், வெவ்வேறு அரசியல் கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து பணியாற்றியதைக் குறிப்பிட்டுப் பேசிய மேற்கு வங்க பா.ஜ.க எம்.பி திலீப் கோஷ், “பிரசாந்த் கிஷோர் எந்தக் கட்சியில் வேலை செய்கிறாரோ, அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருப்பார். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர் அட்டையையும் அவர் வைத்திருப்பார். அதை வைத்துக்கொண்டு உத்தரவிடுங்கள் என்பார். அவர் திரிணாமுல் காங்கிரஸிலும் இருந்தார், நிதிஷ்குமார் கட்சியிலும் இருந்தார். வெவ்வேறு கட்சிகளில் சேர்வதென்பது அவரின் தொழில்” என பிரசாந்த் கிஷோரை விமர்சித்திருந்தார்.

தற்போது காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்திருக்கும் தேர்தல் வியூக அறிக்கை, அந்தக் கட்சியின் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் குஜராத் தேர்தலிலும், 2024 லோக் சபா தேர்தலிலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவார் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பிரசாந்த் கிஷோருக்கு கட்சிக்குள் பதவி ஏதாவது அளிக்கப்படுமா என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிவரல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.