மத்திய அரசில் எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி பிரிவினர்: மொத்த பதவிகளில் காலி இடங்கள் எவ்வளவு?

கடந்த வாரம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தின் போதாமை பற்றி அளவிடும் தரவுகள் சேகரிப்பு பற்றி நினைவூட்டி கடிதம் அனுப்பியுள்ளது. பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சுற்றறிக்கையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை மேற்கோள் காட்டியுள்ளது. பல்வேறு சமூக பிரிவுகளின் பிரதிநிதித்துவம் குறித்த தற்போதைய தரவுகளைப் பார்ப்போம்:

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சுற்றறிக்கை எதைப் பற்றியது?

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சுற்றறிக்கையில், “மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய துறைகள் இடஒதுக்கீடு ரோஸ்டர் முறையை கண்டிப்பாகப் பராமரிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது… மேலும், எந்தவொரு பதவி உயர்வு உத்தரவும் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு உட்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ஜனவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. அதில், “பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்துக்காக அரசாங்கம் திருப்திகரமான நிபந்தனைகளை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

“பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தின் போதாமை பற்றி அளவிடுவதற்காக தரவுகள் சேகரிப்பு மற்றும் இந்தத் தரவை ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாகப் பயன்படுத்துதல்” ஆகியவை இதில் அடங்கும். “பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் அடிப்படையில் ஏதேனும் பதவி உயர்வுகளை அளிப்பதற்கும் முன் இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு” அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களிடையே பல்வேறு சமூகப் பிரிவுகளின் பிரதிநிதித்துவம் பற்றிய தரவு என்ன சொல்கிறது?

பணியாளர்கள், பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த ஆண்டு பல முறை நாடாளுமன்றத்தில் தரவுகளை தாக்கல் செய்துள்ளார்.

மார்ச் 17 ஆம் தேதி ராஜ்யசபாவில் அவர் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், 43 துறைகள் மற்றும் அமைச்சரவை செயலகம், யு.பி.எஸ்.சி மற்றும் தேர்தல் ஆணையம் உட்பட அரசு அலுவலகங்களை உள்ளடக்கியது. ஆனால், ரயில்வே மற்றும் தபால் துறை போன்ற மிகப்பெரிய மத்திய அரசு துறைகளை தவிர்த்திருந்தது.

குரூப் ஏ முதல் குரூப் சி வரையிலான பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை (சஃபாய் கர்மாச்சாரிகள் உட்பட) 5.12 லட்சமாக உள்ளது (அட்டவணையைப் பார்க்கவும்). இவர்களில் 17.70% பேர் எஸ்.சி பிரிவினர், 6.72% பேர் எஸ்.டி பிரிவினர், 20.26% பேர் ஓ.பி.சி பிரிவினர், 0.02% சதவீதம் பேர் இ.டபில்யூ.எஸ் (பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினர்) ஆவர். குரூப்-ஏவில் உயர் பதவிகளில் எஸ்.சி. பிரிவினரின் பிரதிநிதித்துவம் வெறும் 12.86% ஆக உள்ளது. எஸ்.டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் 5.64% ஆக உள்ளது. மற்றும் ஓ.பி.சி பிரிவினர் 16.88% ஆக உள்ளது. ஆனல், இந்த சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு எஸ்.சி – 15%, எஸ்.டி – 7.5%, ஓ.பி.சி – 27% ஆக உள்ளது.

உயர் பதவிகள்: பிப்ரவரி 2 ஆம் தேதி மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், செயலாளர்கள் மற்றும் சிறப்புச் செயலாளர்களில் 6 பேர் மட்டுமே எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்றும், “ஓபிசி தொடர்பான தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை” என்றும் கூறினார்.

ராஜ்யசபாவில் மார்ச் 31 ஆம் தேதி ஜிதேந்திர சிங் கூறியதாவது: 91 கூடுதல் செயலாளர்களில், எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை முறையே 10 மற்றும் 4 ஆகவும், 245 இணைச் செயலாளர்களில், மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை முறையே 26 மற்றும் 29 ஆகவும் உள்ளது.

எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன?

ஜிதேந்திர சிங் பிப்ரவரி 3 ஆம் தேதி ராஜ்யசபாவில் கூறியதாவது, மார்ச் 1, 2020 நிலவரப்படி 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மார்ச் 1, 2019 -இல் 9 லட்சத்து 10 ஆயிரத்து 153 ஆகக் குறைந்துள்ளது. 2018-19 மற்றும் 2020-21 க்கு இடையில், 2.65 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். யு.பி.எஸ்.சி மூலம் 13 ஆயிரத்து 238 பேர்களும், பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) மூலம் 1 லட்சத்து 330 பேர்களும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 900 பேர் உட்பட பணியில் உள்ளனர்.

ஐ.ஏ.எஸ் பணிகளில், 2020-21 ஆண்டுக்கான க்கான பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் ஆண்டு அறிக்கை, ஜனவரி 1, 2021 இல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 6,746 என்றும், நிரப்பப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 5,231 என்றும் 1,515 காலி பணியிடங்கள் என்றும் கூறுகிறது.

எத்தனை இட ஒதுக்கீடு பணியிடங்கள் காலியாக உள்ளன?

ராஜ்ய சபாவில் மார்ச் 17 ஆம் தேதி பதில் அளித்த ஜிதேந்திர சிங், 10 மத்திய துறைகளுக்கான (பாதுகாப்பு உற்பத்தி, ரயில்வே, நிதி சேவைகள், அஞ்சல், பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், உள்துறை, அணுசக்தி, வருவாய் மற்றும் கல்வி) தரவுகளை ஜனவரி 1, 2021 முதல் தாக்கல் செய்தார். இந்த தரவு பெரும் பின்னடைவைக் காட்டுகிறது: எஸ்.சி பிரிவில் (நிரப்பப்பட்டது: 13,202; காலியிடம்: 17,880); எஸ்.டி பிரிவில் (நிரப்பப்பட்ட 9,619; காலியிடங்கள்: 14,061); ஓ.பி.சி (நிரப்பப்பட்டது: 11,732; காலியிடங்கள்: 19,283) இடஒதுக்கீடு பதவிகளில் மொத்தம் 51,224 காலியிடங்கள் உள்ளன. 34,553 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த 10 துறைகளிலும் மத்திய அரசின் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.

இடஒதுக்கீடு மற்றும் பிற பிரிவுகளுக்கு இடையே பெரிய இடைவெளிகளை அமைச்சரவை செயலகத்தில் காணலாம் (குரூப்-ஏ: 81 அதிகாரிகளில், 6 எஸ்.சி, 1 எஸ்டி, 2 ஓபிசிகள்; குரூப்-பி: 109 அதிகாரிகள், 6 எஸ்சி, 6 எஸ்டி, 20 ஓ.பி.சி.கள்); பொது நிறுவனங்களின் துறை (குரூப்-ஏ: 30 அதிகாரிகள், 5 எஸ்.சி, எஸ்.டி அல்லது ஓ.பி.சி இல்லை); நிதிஆயோக் (குரூப்-ஏ: 193 அதிகாரிகள், 19 எஸ்.சி, 13 எஸ்.டி, 15 ஓ.பி.சி); மற்றும் உயர் கல்வித் துறை (குரூப்-ஏ: 221 அதிகாரிகள், 39 எஸ்.சி, 23 எஸ்.டி, 29 ஓ.பி.சி). பணியில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.