திருப்பதி ஆன்மிக சேனலில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி ஆன்மிக சேனலில் சினிமா பாடல்கள் ஒளிபரப்பியதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இந்து தர்ம பிரசாரத்தின் பாகமாக, ‘ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி’ இயங்கி வருகிறது. இதில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள், திருமலையில்  ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணும் விதமாக சிஆர்ஓ, அலுவலகம், கல்யாண கட்டா உள்ளிட்ட 4 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 24 மணி நேரமும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும்.இந்நிலையில், இந்த தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் மாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை விளம்பர இடைவேளைக்குப் பிறகு திடீரென சினிமா பாடல்கள் ஒளிபரப்பானது. இதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த டிவி சேனல் ஊழியர்கள் உடனே அதனை நிறுத்தி ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘செட்டாப் பாக்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒளிபரப்பில் ஏற்பட்ட குளறுபடியால் அரைமணி நேரம் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டது,’’ என்றனர். ஏற்கனவே பக்தருக்கு அனுப்பிய தேவஸ்தான தொலைக்காட்சி யூடியூப் லிங்க்கில் தவறுதலாக ஆபாச படம் ஒளிபரப்பானது. இது குறித்த புகாரின் பேரில் 4 ஊழியர்களை தேவஸ்தானம் பணி நீக்கம் செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.