கொரோனா காலத்தில் ஆயுர்வேதப் பொருள்கள் விற்பனை குறைந்துவிட்டதா? ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே ஆயுர்வேத மருத்துவம் குறித்த பேச்சு அதிகமாக இருந்து வந்தது. முன் எப்போதும் இல்லாத அளவில் ஆயுர்வேத மருந்தின் பயன்பாட்டும் பெருந்தொற்று காலத்தில் உயர்ந்தது. இப்படி ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டுவரும் வேளையில், சமீபத்தில் வந்த ஓர் ஆய்வின் கருத்து இதற்கு முரணாக உள்ளது.

ஆயுர்வேத பொருள்களுக்கான வரவேற்பு கோவிட்-19 தொற்றுப் பரவல் காலத்துக்குப் பிறகு குறைந்துவிட்டதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. Nielsen என்னும் புள்ளிவிவர நிறுவனம் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் புள்ளிவிவரத்தில் ஆயுர்வேத பொருள்கள் விற்பனையில் டூத் பேஸ்ட் விற்பனை 28 சதவிகிதத்திலேயே இரண்டு வருடங்களாக தேக்கம் அடைந்துள்ளது.

India Covid 19 Outbreak

இதே டூத் பேஸ்ட் விற்பனை 2017 – 2019 ஆம் ஆண்டுக்குள் 22 முதல் 27 சதவிகிதமாக வளர்ச்சி பெற்றிருந்தது. அதன்பிறகு தேக்கம் அடைந்துவிட்டது. ஆயுர்வேத எண்ணெய் விற்பனை சதவிகிதம் 7.8% முதல் 7.1% ஆக குறைந்துவிட்டது. ஆயுர்வேத ஷாம்பூக்கள் விற்பனை மட்டும் சிறிது வளர்ச்சியடைந்துள்ளது. அதன் விற்பனை சதவிகிதம் 8.1-லிருந்து 8.8 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு முன்பு பல பெரிய நிறுவனங்கள் ஆயுர்வேத பொருள்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருந்தன. ஊரடங்கு காலத்தில் அந்த ஆர்வம் கொஞ்சம் குறைந்துவிட்டது. இதுவே இந்தத் தேக்கத்துக்கான முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என ஆயுர்வேத நிறுவனங்களைச் சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Ayurveda

Nielsen நிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்குகள்படி கோவிட்-19 தொற்றுக்கு முன் பிரபல முன்னணி நிறுவனங்களின் டூத் பேஸ்ட் விற்பனை நன்றாகவே இருந்துள்ளது. ஆனால் 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அவற்றின் விற்பனை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டாபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா கூறுகையில், “இப்போதும் பலர் ஆயுர்வேத தயாரிப்புகளை விரும்பவே செய்கிறார்கள். முக்கியமாக, டூத்பேஸ்ட விற்பனையில் சாதாரண வெள்ளை பேஸ்ட் விற்பனையைவிட‌ ஆயுர்வேத டூத்பேஸ்டின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மோஹித் மல்ஹோத்ரா

2021-ம் ஆண்டில் நடைபெற்ற ஓர் ஆய்வில் இந்தியாவில் ஊட்டச்சத்துக்காக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோரின் விகிதம் 41% ஆக இருந்தது. இது ஒரே வருடத்தில் 50 % ஆக உயர்ந்தது. எனவே ஆயுர்வேத நிறுவனங்கள் டூத் பேஸ்ட், ஷாம்பூ போன்ற பொருள்களைவிட உணவுப் பொருள்களைத் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளன என்பதும் இந்தத் தேக்கத்திற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

ஆயுர்வேத தயாரிப்புகளில் முன்னணி பிராண்டுகள் மட்டுமல்லாமல் தற்போது பல புதிய சிறிய நிறுவனங்களின் தயாரிப்புகளும் கவனம் பெறத் தொடங்கி உள்ளன. ஆன்லைனில் பொருள்களை வாங்குவது மக்களிடம் அதிகமாகி இருப்பதால் அவர்களுக்கு புதிய பிராண்டுகளை உபயோகித்துப் பார்ப்பதும் எளிதாக உள்ளது.

Ayurvedic Products

வேதிக்ஸ் ஆயுர்வுத நிறுவனத்தின் உரிமையாளர் ஜதின் குஜராத்தி இது குறித்து பேசுகையில், “பெரிய நிறுவனங்களைப் போல் இல்லாமல் நாங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏற்றது போன்ற கஸ்டமைஸ்டு ஆயுர்வேத பொருள்களைத் தயாரிக்கிறோம். மக்கள் அதிக ரசாயனம் சேர்க்காத தயாரிப்புகளை விரும்புவதால் விற்பனை நன்றாகவே நடைபெறுகிறது. எங்கள் நிறுவனமும் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது” எனக் கூறுகிறார்.

இந்தத் தகவல்கள் உண்மையா, ஆயுர்வேத பொருள்களின் விற்பனை பற்றிய உண்மை நிலை என்ன என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.

“இந்தத் தகவல்கள் அனைத்தும் டூத் பேஸ்ட், ஷாம்பூ போன்ற பொருள்களை மட்டுமே மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் எதையும் கணிக்க முடியாது. கோவிட்-19 தொற்று காலத்துக்குப் பிறகு மக்கள் மத்தியில் ஆயுர்வேதம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி உள்ளது.

Ayurveda Practioner Balamurugan

ஆயர்வேத மருந்துகளின் விற்பனை எனப் பார்க்கும்போது, அவை கோவிட்-19 தொற்று காலத்துக்குப் பிறகு அதிகரிக்கவே செய்துள்ளது. மக்கள் தங்கள் உடல்நிலையில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு ஆயுர்வேத மருத்துவர்களை நாடத் தொடங்கி உள்ளனர். ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் கோவிட் 19 காலகட்டத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது மக்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.