சோழர் உலா: சிற்பங்களின் அழகுக்கும் சோழர் கட்டடக் கலைக்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் திருபுவனம்!

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருபுவனம். பட்டுக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர் இது. சோழர்களின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் 4 ஆலயங்களில் இங்குள்ள கம்பகரேஸ்வரர் ஆலயமும் ஒன்று என்பர்.

மற்றவை, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம். திருபுவனம் ‘சோழமண்டலத்து உய்ய கொண்டார் சோழவள நாட்டு திரைமூர் நாட்டு திரைமூர்’ என்று அழைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது. திரைமூர் என்ற இந்த ஊரே மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவனது பட்டப்பெயரான திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பெயரால் திரிபுவன வீரேச்சரம் என்றும் திரிபுவனம் என்றும் மாற்றம் கொண்டது. பின்னர் விஜயநகர காலத்தில் கம்பஹரேஸ்வரம் என்றானது.

கம்பகரேஸ்வரர் ஆலயம்

இங்குள்ள ஈசன் கம்பகரேசுவரர் என்று வணங்கப்படுகிறார். தமிழில் ‘நடுக்கம் தீர்த்த ஈசன்’ என்றும் போற்றப்படுகிறார். ‘திருபுவன ஈச்சரமுடைய மகாதேவர் என்பது கல்வெட்டுகளில் உள்ள திருநாமம். அம்பிகை ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி. இந்தக் கோயில் தேவார வைப்புத் தலமாகும். நரசிம்மர், பிரகலாதன், திருமால், தேவர்கள், மூன்றாம் குலோத்துங்கன், வரகுணபாண்டியன் ஆகியோருக்கு உண்டான கம்பத்தினை அதாவது நடுக்கத்தை நீக்கியதால் இங்குள்ள ஈசன் கம்பகரேஸ்வரர் என்றானார் என்கிறது தலவரலாறு. இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி பிரசித்தமானது. பக்தர்கள் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் சரப முர்த்தியை வழிபட்டு சகல அச்சங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

பக்திப் பிரவாகத்துக்கு மட்டுமல்ல, வரலாற்றுப் பெருமைகளுக்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது. எங்கு நோக்கினும் அழகிய சிற்பங்கள், கரண சிற்பங்கள், மனுநீதிச் சோழனின் வரலாறு, போர்க்களக் காட்சிகள், கல்வெட்டுகள் என ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய பிரமாண்ட ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. கோபுரம் முழுக்க புராணங்களை நினைவுபடுத்தும் அநேக சுதைச் சிற்பங்கள் நிறைந்து உள்ளன. கோபுர வாயிலின் இருபுறமும் நாட்டிய கரணங்கள் அடங்கிய சிற்பங்கள் உள்ளன. இசைக்கருவிகள், நடனம் குறித்து ஆய்வு செய்வோர் இங்குள்ள சிற்பங்களைக் கண்டு பல தகவல்கள் பெறலாம்.

நடுக்கம் தீர்த்த ஈசன்

ஆடல் கலையில் சிறந்து விளங்குவோருக்கு ‘தலைக்கோலி’ என்ற பட்டம் வழங்குவது சோழர் கால சிறப்பு எனலாம். அது பின்னர் மாணிக்கம் என்ற பட்டப்பெயராகவும் மாறியது என வரலாறு கூறும். அப்படி தலைக்கோலி பட்டம் பெற்ற பெண் ஒருத்தியின் சிற்பம் ஒன்று இங்கு மட்டுமே இருப்பது சிறப்பினும் சிறப்பானது எனலாம்.

கரத்தில் தலைக்கோலை ஏந்தி அவள் காட்சி தரும் சிற்பம் கோபுரத்தில் காணலாம். யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமான் பெருமானும் செல்லும் சிற்பமும் இங்கு சிறப்பு.

தலைக்கோலி பட்டம் பெற்ற பெண்ணின் சிற்பம்

கருவறை விமானம் சச்சிதானந்த விமானம் என வித்தியாசமாக அமைந்துள்ளது. ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது. கருவறை திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன. ஆலய உள் மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளன. 1178-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று இங்குள்ள நடராஜர் சந்நிதி, முகமண்டபம் ஆகியவை எழுப்பப்பட்டத் தகவலைக் குறிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் குருவான ஸ்ரீகந்த சம்புவின் மகன் ஈஸ்வர சிவன் என்பவர் இந்தக் கோயிலை நிர்மாணிக்க உதவியதை மற்றொரு கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது.

இங்குள்ள லிங்கோத்பவர் சிலையும், பிச்சாடனர் வடிவமும் அற்புதமானவை. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பல்வேறு மன்னர்களின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்பு பெற்றது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. குலோத்துங்கனின் வடஇந்திய வெற்றியின் நினைவாக இந்த ஆலயம் கட்டப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருவறை சுவாமி சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது. திருக்களிற்றுப் படியில் இறங்கி ஆலய மண்டபத்தைச் சுற்றி வரும்போது மிக நுணுக்கமான சிற்பங்களைக் காணலாம். அடித்தள வரிசையில் ராமாயணச் சிற்பங்கள் காணப்படுவது சிறப்பு. ஒருவர் தன் வாழ்வில் இழந்த அதிகாரம், செல்வாக்கு, சொல்வாக்கு, செல்வம், புகழ், அந்தஸ்து, மனை, மக்கள் யாவும் பெற இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை.

கல்வெட்டு செய்தி

வரலாற்றின் பெருவெள்ளத்தில் பெரும் பங்கை தன்னுள் கொண்டிருக்கும் திருபுவனத்துக்குச் சென்று நாமும் கொஞ்சம் சரித்திரம் பேசுவோம். வாருங்கள் சோழர் உலாவுக்கு!

சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.