புதுடெல்லி: நாடு முழுவதும் தகுதி வாய்ந்த அனைத்து சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கின்றார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக யூனியன் பிரதேசம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது: நாட்டில் தற்போது நிலவிவரும் சூழல் மூலமாக கொரோனா வைரஸ் முற்றிலுமாக செல்லவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. எனவே, மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது விஞ்ஞானிகளும், நிபுணர்களும் தொடர்ந்து தேசிய மற்றும் உலகளாவிய கொரோனா சூழலை கண்காணித்து வருகின்றனர். தொற்று பரவலை ஆரம்பத்திலேயே நிறுத்துவது என்பது நமது முன்னுரிமையாக இருந்து வருகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை செய்வது அவசியமாகும். தகுதி வாய்ந்த அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசியை செலுத்துவது என்பது அரசின் முன்னுரிமையாகும். சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
