ஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் சாய்னா, சிந்து வெற்றி

மணிலா,
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர்ஒன்’ வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் 21-15, 17-21, 21-13 என்றசெட் கணக்கில் தென் கொரியாவின் சின் யுஜினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன் னேறினார். 

முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 27-25, 21-9 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் பாய் யு போவை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 17 நிமிடம் நீடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 15-21, 9-21 என்ற நேர்செட்டில் உலக சாம்பியனான அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) தோற்று வெளியேறினார். இதேபோல் இந்திய இளம் வீராங்கனை மாளவிகா பான்சோத் 21-9, 17-21, 24-26 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யோ ஜியோ மின்னிடம் போராடி தோற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 21-15 என்ற நேர்செட்டில் மலேசியாவின் நிக்டி யோங்கை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் உலகபோட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் 21-12, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லி ஷி பெங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். 
தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் 17-21, 13-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் வீழ்ந்தார். 2 முறை உலக சாம்பியனான கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 21-17, 17-21, 7-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் சிகோ அரோவார்டோயோவிடம் தோற்று வெளியேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அஸ்வினி-பட்ஷிகா கவுதம் ஜோடி 19-21, 12-21 என்றநேர்செட்டில் மலேசியாவின் அன்னா சிங் யிக் செயோங்-டெக் மே ஸிங் இணையிடம் தோல்வியைதழுவியது. 
இந்தியாவின் சிம்ரன் சிங்-ரிதிகாதாகெர் ஜோடியும் 15-21, 11-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் பியர்லி தான்-முரளிதரன் தினாக் ஜோடியிடம் பணிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.