இந்தி மொழி விவகாரம்: “நடிகர் சுதீப் கூறியது சரிதான்..!" – கர்நாடக முதல்வர் கருத்து

கிச்சா சுதீப்பின் `இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது..!’ என்ற கருத்துக்கு ஆதரவாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருந்த கிச்சா சுதீப் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது” என்றார். அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டரில், “இந்தி இதற்கு முன்பும்… இப்போதும் இனிமேலும்… நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்” என பதிலளித்திருந்தார். 

அஜய்

அதைத் தொடர்ந்து சுதீப், “நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்குப் புரிந்தது. ஏனென்றால் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டிருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்? நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம்” என்றார்.  

இதற்கு அஜய் தேவ்கன், “தவறாக நான் புரிந்துகொண்டதைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல அனைவரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று சமாதானமாகப் பதிலளித்திருந்தார். 

சுதீப்

இரு நடிகர்களுக்கிடையேயான இந்த கருத்து பகிர்வு நேற்றைய தினம் ஹாட் டாப்பிக்காக சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருபோதும் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்காது. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஒவ்வொரு மொழியின் மக்களும் பெருமைப்படுவதற்கு அந்த மொழிக்கென சொந்த, வளமான வரலாறு இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். 

பசவராஜ் பொம்மை

அதைத் தொடர்ந்து இன்று கர்நாடக பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மை கிச்சா சுதீப்-க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “மொழிகளால்தான் நமது மாநிலங்கள் உருவாகின. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுதீப் கூறியது சரிதான், அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.