பப்ஜி மதன் ஜாமின் மனு தள்ளுபடி| Dinamalar

தமிழக நிகழ்வுகள்:

பப்ஜி மதன் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை :குண்டர் தடுப்பு சட்டம் ரத்தான நிலையில், ஜாமின் கோரி, ஆபாச பேச்சுக்காரரான பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.

ஆபாசமாகப் பேசியபடி, ‘ஆன்லைன்’ விளையாட்டு நடத்திய பப்ஜி மதனுக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில், 2021 ஜூனில் மதன் கைது செய்யப்பட்டார். பின், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.
இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மூன்றாவது முறையாக ஜாமின் கோரி, பப்ஜி மதன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என, மதன் தரப்பில் வாதிடப்பட்டது.

மன ரீதியாக பாதிப்பு

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தேவராஜன் பேசியதாவது:குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்துக்காக, ஜாமின் வழங்கக்கூடாது; பப்ஜி விளையாடும்போது ஆபாசமாகப் பேசியதால், சிறுவர்கள், இளைஞர்கள் என, 80 பேர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் வழங்கினால், மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதை ஏற்ற நீதிபதி, மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

latest tamil news

கணவர் பெயருக்கு களங்கம்பாடகி சின்மயி போலீசில் புகார்

சென்னை : ‘என் கணவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், குழந்தைகளின் படங்களை, ‘மார்ப்’ செய்து வெளியிடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாடகி சின்மயி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசிப்பவர் சின்மயி, 37; பாடகி. கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற படத்தில், இவர் பாடிய, ஒரு தெய்வம் தந்த பூவே… என்ற பாடல் மிகவும் பிரபலம். இதுபோல, ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். சமூக நல கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:என் கணவர் ராகுல் ரவீந்திரன், ‘போட்டோ ஷூட்டிங்’ கம்பெனி நடத்தி வருகிறார். எங்கள் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி, தேவ ராகுல் என்பவர், ஒரு குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணில் இருந்து, குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்.
இது அப்பட்டமான மோசடி. என் கணவரின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்து வருகிறார். தேவராகுல் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
******************

இந்திய நிகழ்வுகள்

நடிகை பலாத்காரம்: நடிகர் தலைமறைவு

கொச்சி :பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது, நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு மற்றும் அவரது அடையாளத்தை வெளியிட்ட வழக்குகளை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது, நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறினார். இதுதொடர்பாக, விஜய் பாபு மீது வழக்கு பதிவானது. இதுகுறித்து, போலீசார் நேற்று கூறியதாவது:திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது, 22ம் தேதி, ‘பேஸ்புக்’ சமூக வலைதள பதிவு வாயிலாக, நடிகை ஒருவர் பாலியல் புகாரை பதிவு செய்துள்ளார்.
இந்த நடிகை, விஜய் பாபு தயாரித்த சில படங்களில் நடித்துள்ளார். நடிகையின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பிரச்னைகளுக்கு ஆதரவாக இருந்த விஜய் பாபு, அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். பின், கடந்த ஒன்றரை மாதங்களாக, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அத்துடன், நடிகையின் நிர்வாண ‘வீடியோ’க்களை பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் பாபுவின் வலையில், மேலும் பல பெண்கள் சிக்கி இருப்பதாகவும், நடிகை கூறி உள்ளார். இதுதொடர்பாக, விஜய் பாபு மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சமூக வலைதளத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த விஜய் பாபு, நடிகையின் பெயரை குறிப்பிட்டு, அவருக்கு எதிராக அவதுாறு வழக்கு தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காக, விஜய் பாபு மீது, மற்றொரு வழக்கும் பதிவாகி உள்ளது. தலைமறைவாக இருக்கும் அவர், விரைவில் கைது செய்யப்படுவார்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.

10 லட்சம் குற்றவாளிகளின் தகவல் ‘ரெடி’

புதுடில்லி :நாட்டில் பாலியல் குற்றங் களில் ஈடுபட்டு தண்ட னைக்கு உள்ளான, 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட, 10 லட்சத்து 69 ஆயிரம் பேரின் விபரங்கள், தேசிய பாலியல் குற்றவாளி வலைதளத்தில் உள்ளன. இவற்றை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் புலனாய்வு மேற்கொள்ளலாம்.
இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, அடையாள அட்டை, கைரேகை பதிவு உள்ளிட்ட விபரங்கள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை சேமித்து வைக்கின்றன.
இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும், பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை பொதுமக்கள் பார்க்க முடியாது. போலீஸ், நீதித்துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகள் மட்டுமே இந்த விபரங்களை காண முடியும். அமெரிக்காவில் மட்டும் பாலியல் குற்றவாளிகளின் விபரங்களை பொதுமக்களும் அறியும் வசதி உள்ளது.

***************

உலக நிகழ்வுகள்

இந்திய வம்சாவளிக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர் :சிங்கப்பூரில், மனநிலை பாதிக்கப்பட்டவர் என, டாக்டர் அளித்த ஆதாரங்கள் ஏற்கப்படாமல், போதைப் பொருள் கடத்திய வழக்கில், மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிக்கு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மேல்முறையீடு
இங்கு, மலேஷியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம், 34, கடந்த 2009ல் ஹெராயின் கடத்தி வந்ததாக கைதானார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2010ல் அவருக்கு துாக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என, அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். டாக்டரின் சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை ஏற்க மறுத்த நீதிமன்றம், தர்மலிங்கத்தின் துாக்கு தண்டனையை உறுதி செய்தது. ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு நவ., மாதம், தர்மலிங்கத்திற்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.
இதற்கிடையே, அவர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

‘இந்த வழக்கில் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும்’ என, மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங்கிற்கு கடிதம் எழுதினார். அதில், ‘சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், மனநலம் பாதிக்கப்பட்டவரை துாக்கிலிடுவது தடை செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டு, ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு இருந்தனர்.
போராட்டம் முடிவு

இருப்பினும், தர்மலிங்கம் நேற்று துாக்கிலிடப்படுவார் என, அறிவிக்கப்பட்டது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என நினைத்த அவரது தாய், மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நேற்று முன்தினம் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முடிவில், ‘இந்த தண்டனை சட்டப்படி சரியானது’ என, நீதிபதிகள் அறிவித்தனர். இறுதியாக, 10 ஆண்டு நீடித்த தண்டனைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று சிங்கப்பூர் அரசால், தர்மலிங்கம் துாக்கிலிடப்பட்டார்.
அவரது இறுதி சடங்குகள், மலேஷியாவின் ஈப்போ நகரில் நடைபெறும் என, குடும்பத்தினர் கூறினர்.

அமெரிக்காவில் மாணவர்களுக்கு ஆபாச பட வகுப்பு

உட்டா :அமெரிக்க கல்லுாரி ஒன்றில், ஆபாச திரைப்படங்கள் தொடர்பாக கோடை கால சிறப்பு செமஸ்டர் வகுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் நகரில் ‘வெஸ்ட் மினிஸ்டர்’ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் தவறென்று ஒதுக்கப்பட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து, இக்கல்லுாரியில் சிறப்பு செமஸ்டர் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த வகையில், ‘போர்னோகிராபி’ எனப்படும், ஆபாச திரைப்படங்கள் குறித்து கோடை கால சிறப்பு செமஸ்டருக்கு இந்த கல்லுாரி அழைப்புவிடுத்துள்ளது. இந்த வகுப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன.இதில், மாணவர்களை குழுவாக அமர வைத்து ஆபாச படங்களை திரையிட்டு அது தொடர்பாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.