பெட்ரோல் விலையை தமிழகம் குறைக்கவில்லை: மோடி வருத்தம்| Dinamalar

புதுடில்லி-”பெட்ரோல், டீசல் மீதான, ‘வாட்’ எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்குமாறு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரியை குறைக்காமல் சாமானிய மக்களுக்கு அநீதி இழைக்கின்றன.

இது மக்கள் மீது மிகப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக உள்ளது,” என, முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

மக்களுக்கு அநீதி

அப்போது பிரதமர் கூறியதாவது:நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. தொற்று அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை. எனவே அலட்சியம் கூடாது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவாக செய்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு சுமையாகி விட கூடாது என்பதற்காக, அதன் மீதான கலால் வரியை கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு குறைத்தது. அப்போது, பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புகூட்டு வரியை குறைத்து, அதன் பலனை மக்களுக்கு அளிக்குமாறு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.இதை ஏற்று, பா.ஜ., ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களும் மதிப்புக்கூட்டு வரியை குறைத்தன. எதிர்க்கட்சியினர் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

ஆம் ஆத்மி கூட நீண்ட தாமதத்துக்கு பின் டில்லியில் வரியை குறைத்தது. மதிப்புகூட்டு வரியை குறைத்ததன் வாயிலாக கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் 3,500 – 5,000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன. மக்கள் பயன் அடைகின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த மாநிலங்கள் வரி குறைப்பை அமல்படுத்தி உள்ளன. ஆனால், தமிழகம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வரியை குறைக்காமல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளன. எனவே, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு வசிக்கும் மக்கள் பெட்ரோல், டீசலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.நான் யாரையும் விமர்சிக்கவில்லை. உங்கள் மாநில மக்களின் நலனுக்காக வரியை குறைக்குமாறு கெஞ்சுகிறேன்.

இப்போது கூட ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. தயவு செய்து மதிப்புகூட்டு வரியை குறையுங்கள். சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், கோல்கட்டா, மும்பை நகரங்களில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு, 111, 118, 119, 115, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கடும் கண்டனம்

லக்னோ, ஜம்மு, கவுகாத்தி, டேராடூன் ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு 105, 106, 105, 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 42 சதவீதத்தை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே, மதிப்புகூட்டு வரியை குறைக்குமாறு முதல்வர்களிடம் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநில அரசுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.கொரோனா பரவல் அல்லது வேறு எந்த நெருக்கடியாக இருந்தாலும், மத்திய அரசு ஒரு பிரச்னையை கையாளத் தவறிய போதெல்லாம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது பழியை சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இப்போது பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. முதலில் ஜி.எஸ்.டி., நிலுவை தொகையை மாநிலங்களுக்கு அளியுங்கள். சவுகதா ராய், லோக்சபா எம்.பி., – திரிணமுல் காங்.,நேரடி வரி வசூலில் மஹாராஷ்டிராவின் பங்கு தேசிய அளவில் 38.3 சதவீதமாக உள்ளது. ஜி.எஸ்.டி., வரி வசூலில் 15 சதவீதம் மஹாராஷ்டிரா பங்களிக்கிறது. எங்களுக்கு வரவேண்டிய 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை தொகையை முதலில் கொடுங்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை நிறுத்துங்கள்.உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

காங்கிரஸ் கண்டனம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:விமர்சனங்கள் வேண்டாம்; கவன சிதறல்கள் வேண்டாம்; பூச்சாண்டி காட்ட வேண்டாம் என மோடியை கேட்டுக் கொள்கிறேன். காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.48 ரூபாயாக இருந்தது.டீசலுக்கு லிட்டருக்கு 3.56 ரூபாயாக இருந்தது. பா.ஜ., ஆட்சியில் பெட்ரோலுக்கான வரி லிட்டருக்கு 27.90 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு 21.80 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த வரி உயர்வை முதலில் திரும்ப பெறுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

தீ விபத்துகள்: பிரதமர் எச்சரிக்கை!

முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:நாடு முழுதும் உள்ள வனப்பகுதிகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் செயல்பட வேண்டும். மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்களில் தீயணைப்பு கருவிகள் கையிருப்பு தொடர்பான தணிக்கை நடத்தி, அப்பாவி உயிர்களை காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.