போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கிய நாடு எது? – வெளியான தகவல்

மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா இன்று 64-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதற்கு பதிலடியாக தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பணமான ரூபெளில் தான் வாங்க வேண்டும் என ரஷியா அதிரடியாக அறிவித்தது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் தேவையை ரஷியாவை சார்ந்தே உள்ளதால் ரஷியாவின் இந்த அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியது.
அதேவேளை, பொருளாதார தடைகளை விதித்தபோதும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கிய நாடு எது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எரிவாயு மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் என்ற சுயேட்சை ஆராய்ச்சி குழு மேற்கொண்ட ஆய்வில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கியது ஐரோப்பிய நாடான ஜெர்மனி என தெரியவந்துள்ளது.
போர் தொடங்கியது முதல் கடந்த இரண்டு மாதங்களில் ரஷியாவிடமிருந்து 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு  ஜெர்மனி இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷியா மொத்தம் 63 பில்லியன் யூரோ (66.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பாதித்துள்ளது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல், ஜெர்மனி தனது இயற்கை எரிவாயு தேவையில் 35 சதவீதம் ரஷியாவிடமிருந்தே கொள்முதல் செய்கிறது. அதேவேளை, போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து எரிபொருள், இயற்கை எரிவாயு அதிக அளவில் கொள்முதல் செய்த இரண்டாவது நாடு இத்தாலி என தெரியவந்துள்ளது. 
ரஷியாவிடமிருந்து 6.9 பில்லியன் யூரோ மதிப்பிலான எரிபொருளை இத்தாலி கொள்முதல் செய்துள்ளது. இந்த இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ரஷியாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய், எரிபொருள், இயற்கை எரிவாயு வாங்கும் 3-வது நாடு சீனா என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா கடந்த 2 மாதத்தில் ரஷியாவிடமிருந்து 6.7 பில்லியன் யூரோ மதிப்பிற்கு எரிவாயு, கச்சா என்ணெய் வாங்கியுள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்த 2 மாதங்களில் எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷியாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில் 71 சதவிகிதம் அதாவது 44 பில்லியன் யூரோ ஐரோப்பிய யூனியன் நாடுகளிடமிருந்தே வந்துள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.