`NOTA-க்கு அதிக வாக்குகள் விழுந்தால் என்ன நடக்கும்?' – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஒவ்வொரு தேர்தலின்போதும் `நோட்டா (NOTA)’ என்ற வார்த்தை அனைவர் மத்தியிலும் உலாவரும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசிப் பொத்தானாக அமைந்திருக்கும் இந்த NOTA-வின் விரிவாக்கம் `None of The Above’. அதாவது, EVM-ல் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு செலுத்த விருப்பமில்லை என்பதையும் ஒரு வாக்காகப் பதிவு செய்ய நோட்டா பொத்தான் வைக்கப்பட்டிருக்கும். இது முதல்முறையாக 2013-ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சேர்க்கப்பட்டது.

NOTA – நோட்டா

அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.08 சதவிகித வாக்குகளும், 2019 மக்களவைத் தேர்தலில் 1.06 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. நோட்டா வைக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அரசியல் கட்சிகள் நல்ல வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், இந்தியாவில் தற்போதைய சிட்டிங் எம்.பி-க்களில் 40 சதவிகித எம்.பி-க்கள் மீது கிரிமினல் வழக்குகளும், 25 சதவிகித எம்.பி-க்கள் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் இருப்பதாகத் தேர்தலின்போது அவர்கள் தாக்கல் செய்யும் தேர்தல் பிரமாணப் பத்திரிகை அடிப்படையில் தரவுகள் கூறுகிறது.

ஒருவேளை ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால், நோட்டாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் வேட்பாளர் அதாவது, அந்தத் தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்களால் `எங்களின் பிரதிநிதியாக இவர் வேண்டாம்’ என்று நிராகரிக்கப்பட்ட நபர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுவரையில், அவ்வாறு எந்தத் தேர்தலிலும் நடைபெறவில்லையென்றாலும், அந்தக் கேள்வி இன்னும் முக்கியமான விவாதப்பொருளாகவே இருக்கிறது.

NOTA – நோட்டா

இதனாலேயே, ஒரு தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்திருந்தால் அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகளும் அவ்வப்போது தொடர்ச்சியாக எழுகிறது. இந்த நிலையில், பிரபல எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஷிவ் கேரா, நோட்டா தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், `ஒரு தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகியிருந்தால் அந்தத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து, அங்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். அதோடு, அந்தத் தொகுதியில் நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெற்ற வாக்காளர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும்‘ என்று ஷிவ் கேரா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் (இடது)

அப்போது, மனுதாரர் ஷிவ் கேரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டதாலும், பாஜக வேட்பாளரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதாலும் வாக்குப் பதிவு இல்லாமல் போட்டியின்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை மேற்கோள்காட்டி, “வேறு வேட்பாளர் இல்லாததால், அனைவரும் ஒரே வேட்பாளர் பக்கம் மட்டுமே செல்ல வேண்டியிருந்ததை சூரத்தில் நாங்கள் பார்த்தோம். ஒரேயொரு வேட்பாளர் இருந்தாலும், வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கூடிய விருப்பம் இருக்கக்கூடும் என்பதால் தேர்தல் நடத்த வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா தேர்வு என்பது நமது தேர்தல் முறையில் வாக்காளரிடமுள்ள ‘நிராகரிக்கும் உரிமையின் (right to reject)’ வெளிப்பாடு. ஆனால், தற்போது நோட்டா என்பது குடிமகனுக்கு சொந்தமானதை நிராகரிக்கும் உரிமையாகப் பார்க்கப்படுகிறது. நல்ல வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே நோட்டாவின் நோக்கம். ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அவ்வாறிருக்கும்போது ஒரு வாக்காளர் என்ன செய்வார்… எனவே, நோட்டா என்பது வாக்காளரின் விரல் நுனியில் இருக்கும் சக்திவாய்ந்த ஆயுதம்.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்திய தேர்தல் ஆணையம் நோட்டாவை ஒரு செல்லுபடியாகும் வேட்பாளராகக் கருதத் தவறிவிட்டது. ஜனநாயக ஆட்சி முறையில் இது மிகவும் அவசியமானது. ஒரு வாக்காளர் வாக்கு செலுத்தாமலிருப்பதற்குப் பதில், இது சரியான தேர்வாக இருக்கும்’ என மனுவில் இருப்பதையும் சேர்த்துக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, `இந்த விவகாரம் தேர்தல் செயல்முறை பற்றியது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்’ என்று கூறி இதற்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.