ரூ.27 லட்சம் கோடிக்கு கணக்கு சொல்லுங்கள்: எதிர்கட்சிகள் ஆவேசம்

வாட் வரியை குறைக்காத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பிரதமர் மோடி கடுமையாக சாடிய நிலையில், மோடி தலைமையிலான பாஜ ஆட்சியை காட்டிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கலால் வரி மிக குறைவாக இருந்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி ஜீ, விமர்சனங்கள் வேண்டாம். திசை திருப்ப வேண்டாம். பொய்கள் சொல்ல வேண்டாம். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.3.56ம் கலால் வரி இருந்தது. மோடி அரசில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.27.90, டீசல் லிட்டருக்கு ரூ.21.80 ஆக உள்ளது. தயவு செய்து பெட்ரோல் மீதான கலால் வரி உயர்வு ரூ.18.42, டீசல் ரூ.18.24 மீதான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் வரியாக பாஜ அரசு வசூலித்த ரூ.27 லட்சம் கோடிக்கு கணக்கு சொல்ல வேண்டும்,’ என கூறியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘ஒன்றிய அரசு மாற்றந்தாய் மனப்போக்கோடு மகாராஷ்டிராவிடம் நடந்து கொள்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பேற்காது என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, கொரோனா ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மோடி அரசியலாக்கி விட்டார் என விமர்சித்தார். பாஜ கடும் கண்டனம் பிரதமர் மோடி கருத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘‘மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் ஜார்கண்ட் முதல்வர்கள் பாசாங்கு காட்டுகின்றனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க  வேண்டும் என வலியுறுத்துகின்றனர் ஆனால், எரிபொருள் மீது அதிகளவில் இவர்கள்தான் வரியை விதிக்கின்றனர்,” என்றார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தனது டிவிட்டர் பதிவில், ‘ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்த பின்னரும் வரியை குறைக்காத எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அவர்கள் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.