1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! புதுச்சேரியில் அதிரடி| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும், ‘ஆல் பாஸ்’ போட வேண்டும் என, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

புதுச்சேரி பள்ளி கல்வித் துறையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, கடந்த 25ம் தேதி ஆண்டு தேர்வு துவங்கி, நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கு நாளை 29ம் தேதியுடன் இறுதி தேர்வு முடிகிறது.
இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ‘ஆல் பாஸ்’ செய்ய முடிவெடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றிக்கையில், ‘புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்களை குறிப்பிட்டு, அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ செய்ததற்கான பட்டியலை தயாரிக்க வேண்டும்.

இப்பட்டியலை பள்ளித் துணை ஆய்வாளர்களிடம் காண்பித்து அனுமதி பெற்ற பிறகு, ரிசல்ட்டை வெளியிட வேண்டும்.வருகைப்பதிவு குறைவு, கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த காரணம் கூறியும் மாணவர் தேர்ச்சி பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது.ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை 29ம் தேதியுடன் இந்தாண்டு பள்ளி நாட்கள் முடிகிறது.

இவர்களுக்கு வரும் 30ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை துவங்குகிறது.பத்தாம் வகுப்பிற்கு அடுத்த மாதம் 30ம் தேதியும், பிளஸ் 2 வகுப்பிற்கு அடுத்த மாதம் 28ம் தேதியுடன் பள்ளி நாட்கள் முடிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

கல்வி உரிமை சட்டப்படி, ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு தோறும் கட்டாய தேர்ச்சி அறிவிக்கப் படுகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்பதாம் வகுப்பிற்கு, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-20, 2020-21ம் கல்வியாண்டுகளில் ‘ஆல் பாஸ்’ அளிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக, 2021-22ம் கல்வியாண்டிலும் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட உள்ளது.இது, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எவ்வளவு பேர்:புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 741 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

இதில் தேர்ச்சி அறிவிப்பின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில்-76,166 பேர், காரைக்கால்-16,407, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரி்-48,240, காரைக்கால்-10,078 பேர் தேர்ச்சி பெற உள்ளனர்.ஒன்பதாம் வகுப்பில் புதுச்சேரியில் 16,500, காரைக்கால்-3,500 பேருக்கு தேர்ச்சி அளிக்கப்ப்ட உள்ளது. இரு பிராந்தியங்களிலும் மொத்தம் 1,70,891 மாணவர்கள் தேர்ச்சி பெறுவர்.

இவ்வளவு அவசரம் தேவையா?

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் 28ம் தேதி மற்றும், நாளை 29ம் தேதி வரை ஆண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.தேர்வு முடிவதற்கு முன்பாகவே, ‘ஆல் பாஸ்’ என முடிவு செய்து, பள்ளிக் கல்வித் துறை அவசர அவசரமாக சுற்றறிக்கை அனுப்பியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘ஆல் பாஸ்’ என்று தெரிந்த பிறகு இன்றும், நாளையும் நடைபெறும் ஆண்டு தேர்வினை மாணவர்கள் எப்படி அணுகி எழுதுவார்கள். அதனை யோசிக்க வேண்டாமா. இப்படி ஒரு அவசரம் பள்ளி கல்வித் துறைக்கு தேவையா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ஆண்டு தேர்வு முடிந்த பிறகு இந்த சுற்றறிக்கை அனுப்பி இருக்கலாம் என்பதே, ஆசிரியர்களின் கருத்தாகவும் உள்ளது.

மாகி, ஏனாமில் எப்படி?

மாகி மாணவர்கள் கேரளா மாநில பாடத்திட்டத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திரா மாநில பாடத்திட்டத்தையும் பின்பற்றுகின்றனர். இந்த பிராந்தியங்களில் 14,500 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு,, ‘ஆல் பாஸ்’ இன்னும் அறிவிக்கப் படவில்லை.கடந்தாண்டு இந்த பிராந்தியங்களில் ஒன்பதாம் வரை ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு அம்மாநிலங்களின் முடிவினை பொறுத்து அறிவிக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்து, காத்திருக்கிறது.

காரணம் என்ன?

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, அவ்வப்போது பள்ளிகள் மூடப்பட்டன.கடந்த ஜனவரி 10ம் தேதி முதல், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டது.அதன்பிறகு பிப்.4ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, முழு நேரமாக செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு, கல்வியாண்டு முழுவதுமாக பள்ளிகள் செயல்படாததால், ‘ஆல் பாஸ்’ வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.