இந்தி தேசிய மொழியா? நடிகர் அஜய் தேவ்கனை வறுத்தெடுத்த நெட்டீசன்கள்!

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என தவறான தகவலை பதிவு செய்த நடிகர் அஜய் தேவ்கனை நெட்டீசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கன்னட நடிகர் சுதீப் நேற்று ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்றார். அப்போது அவரிடம், கன்னடப் படமான கேஜிஎஃப் -2 பான் இந்தியா படமாக உருவாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சுதிப், “கன்னடா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகிவிட்டன. எனவே இந்தி இனி தேசிய மொழியாக இருக்க முடியாது” எனக் கூறினார்.

image

சுதீப்பின் கருத்தினை சமூக வலைதளங்களில் பலர் ஆதரித்தும், எதிர்த்தும் விமர்சித்து வந்தனர்.

இந்த சூழலில், சுதீப்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜ்ய் தேவ்கன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தேசிய மொழியாக இருந்தது; இருக்கிறது; இனிமேலும் இருக்கும்” என அவர் கூறியிருந்தார். நடிகர்களுக்கு இடையேயேயான இந்த கருத்து மோதல் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.

image

இந்நிலையில், இந்தியை தேசிய மொழி என தவறான தகவலை கூறியதற்காக சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் அஜய் தேவ்கனை கலாய்த்து வருகின்றனர். “இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று கிடையாது. ஆட்சி மொழிகளாக பட்டியலிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் ஒன்றுதான் இந்தி. தவறான தகவலை பதிவு செய்ததற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பல நெட்டீசன்கள் ட்வீட் செய்துள்ளனர். “ஒரு மொழியில் பிற மொழி படங்கள் டப் செய்யப்படுவதால் அது தேசிய மொழியாக மாறிவிடுமா? உங்கள் பொது அறிவு அபாரம்” என நெட்டீசன் ஒருவர் கிண்டல் செய்துள்ளார். “மற்ற மொழி திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்படுவதுதான் உங்கள் பிரச்னையா? அப்படியென்றால், இனி இந்தி படங்களை வேறு மொழிகளில் டப் செய்யப்படுவதை நிறுத்திவிடுங்கள்” என ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார். இதுபோல பல கமெண்ட்டுகள் அஜய் தேவ்கனை விமர்சித்து சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.