சேகர் ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் `பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி மாற்றப்பட்டது’ என்பது குறித்து சரியாக சேகர் ரெட்டியும், அவருடன் தொடர்புடைய சீனிவாசுலு, பிரேம்குமார் உள்ளிட்டோர் விளக்கமளிக்கவில்லை.
image
அதனால் இதுகுறித்து சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதையடுத்து, மத்திய அமலாக்கத்துறையும், இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை சேகர் ரெட்டி நாடியபோது உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி வினீத் சரண் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 20-ம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ‘வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் மனுதாரருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை’ என சேகர் ரெட்டி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
image
இதையும் படிங்க… ஜெய்பீம் விவகாரம்: சூர்யா, ஜோதிகா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதித்தோடு, வழக்கை தொடர்ந்து விசாரணை செய்யலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட புகார் மற்றும் பிரதான வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.