இந்தியா கொரோனா உயிரிழப்பு 47 லட்சம்? – ஐசிஎம்ஆர் திடீர் விளக்கம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது மத்திய அரசு அறிவித்துள்ளதை விட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிடும் போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அளித்துள்ள தகவலோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதர நிறுவனத்தின் இந்த அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது நாட்டில் திட்டமிட்ட ரீதியில் தரவுகளை சேகரிக்கும் முறை அமலில் உள்ளது. உலக சுகாதர நிறுவனத்தின் மேம்போக்கான பத்திரிகை அறிக்கையை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா மரணங்கள் ஏற்படத் தொடங்கிய போது, அது குறித்த வரையறை நம்மிடம் இருக்கவில்லை. அப்போது உலக சுகாதார நிறுவனத்திடமும் அத்தகைய வரையறை இருக்கவில்லை.

கொரோனா மரணங்களில் 95 சதவீதம், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 4 வாரங்களுக்குள் நிகழ்ந்துள்ளதை தரவுகள் உறுதிப்படுத்தியதால், கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் உயிரிழப்பவர்களை மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்று கருதுவது என முடிவெடுக்கப்பட்டது.

இதே போல், கொரோனா தடுப்பூசி குறித்த தரவுகளையும் திட்டமிட்ட ரீதியில் நாம் சேமித்து வருகிறோம். இவ்வாறு 130 கோடி தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. நம்மிடம் உள்ள தரவுகள் நம்பகத்தன்மை மிக்கவை. எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை பொருட்படுத்த வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.