பிரிட்டன் நபருக்கு மங்கிபாக்ஸ் தொற்று| Dinamalar

லண்டன்-விலங்குகளின் உடலில் இருந்து மனிதர்களுக்கு பரவும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் ஒருவித அம்மை நோய் தொற்று, பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு திரும்பிய நபருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவரை பரிசோதித்தபோது, ‘மங்கிபாக்ஸ்’ எனப்படும் ஒருவித அரிய வகை அம்மை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர், லண்டனில் உள்ள மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, பிரிட்டன் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:மங்கிபாக்ஸ் தொற்று பரவல் மிகவும் அரிதாக ஏற்படும். இது, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவாது; மிக நெருக்கமான தொடர்பு இருந்தால் மட்டுமே பரவும். சில குறிப்பிட்ட விலங்குகளின் உடம்பில் இந்த தொற்று இருந்தால், அது மனிதர்களுக்கு பரவும். தோல், மூக்கு, வாய், கண் வாயிலாக தொற்று பரவுகிறது.

தொற்று பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, கழுத்து வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். முகம் மற்றும் உடம்பில் சிறிய வேனற்கட்டிகள் போல் உருவாகி, பின் படிப்படியாக சிரங்காக மாறி மறையும். மற்ற தொற்றுகளை போல எளிதில் பரவாது. எனவே அச்சம் கொள்ள தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.