ஹாங்காங்கின் அடுத்த தலைவராக சீன அரசின் விசுவாசி ஜான் லீ தேர்வு| Dinamalar

ஹாங்காங்-ஹாங்காங்கின் அடுத்த தலைமை நிர்வாகியாக, சீன அரசின் விசுவாசியாக கருதப்படும் ஜான் லீ தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.

கடந்த 1997 முதல், நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில், ஹாங்காங் உள்ளது. இதன் தலைமை நிர்வாகியாக கேரி லாம் இருந்து வருகிறார். இவர், சீன அரசின் உத்தரவை பின்பற்றி எடுத்து வந்த நடவடிக்கைகள் மக்களை ஆத்திரம்அடைய வைத்தன. சீனாவின் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த, 2019ல், அரசுக்கு எதிராக நடந்த போராட்டம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, சீனா அரசு அமல்படுத்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், கேரி லாமின் பதவிக் காலம், ஜூன் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஹாங்காங்கின் அடுத்த தலைமை நிர்வாகியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

இதில், ஹாங்காங்கின் முன்னாள் தலைமை செயலரும், முன்னாள் பாதுகாப்புத் துறை செயலருமான ஜான் லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்தல் குழுவில், மொத்தமுள்ள 1,500 உறுப்பினர்களில், ஜான் லீக்கு ஆதரவாக, 1,416 உறுப்பினர்கள் ஓட்டளித்துள்ளனர். ஜூலை 1ம் தேதி, ஜான் லீ பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர், சீன அரசின் விசுவாசியாக கருதப்படுவதால், இவரது தேர்வுக்கு ஹாங்காங் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.