தடை செய்யப்பட்ட பகுதியில் ஜீப் ரேஸில் ஈடுபட்டதாக தேசிய விருது பெற்ற நடிகர் மீது போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள குணச்சித்திர நடிகரும், ஹீரோவுமான ஜோஜு ஜார்ஜ் (45), தமிழில் தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் மலையாளத்தில் நடித்த ‘ஜோசப்’ என்ற படம், தமிழில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ், மலையாளத்தில் சில படங்கள் தயாரித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமன் என்ற பகுதியில்,  மலைமுகடுகளுக்கு இடையே அனுமதி பெறாமல் அவ்வப்போது ஜீப்  ரேஸ் நடப்பது வழக்கம். இங்குள்ள எஸ்டேட்டில்  தனது விலையுயர்ந்த ஜீப்பில் ஜோஜு ஜார்ஜ் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பல ஜீப் ஓட்டுநர்கள் கலந்துகொண்டு, தங்களின் ஜீப் ஓட்டும்  திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஒருவர் ஓட்டி வந்த ஜீப், திடீரென்று மூன்று முறை தலைக்குப்புற கவிழ்ந்தது. பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்த ஜீப்பை அவர் மலைமுகட்டுக்கு கொண்டு வந்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியானது. விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதியில், அனுமதி இல்லாமல்  பந்தயத்தில் ஈடுபட்டதாக கூறி, ஜோஜு ஜார்ஜ் மீது கேரள மாணவர் சங்கம்  போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து இடுக்கி மாவட்ட ஆர்டிஓ  உள்ளிட்ட அதிகாரிகள் ஜோஜு ஜார்ஜிடம் விசாரணை மேற்கொண்டனர். பிறகு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரது வாகன உரிமம் உள்ளிட்ட சான்றுகளை  எடுத்துக்கொண்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த வருடம்  இதுபோல் மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான்,  பிருத்விராஜ் ஆகியோர் கார்  ரேஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானாலும், அது அவர்கள்தான் என்று உறுதி செய்யப்படாத நிலையில், வழக்கில் இருந்து அவர்கள் தப்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.