’தோத்த காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல’ – கமலின் ’விக்ரம்’ பட பாடல் குறித்து கஸ்தூரி விமர்சனம்

Actress Kashturi criticizes Kamalhassan’s Vikaram movie song: கமலஹாசனின் விக்ரம் பட பாடல் வரிகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், தோத்த காண்டு மொத்ததையும் இறக்கிட்டாப்ல என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மே 15-ம் தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று விக்ரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலை, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலில் கமலஹாசன் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. பாடலுக்கு கமல் போடும் குத்தாட்டம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.

இதனையடுத்து, பாடலையும் கமல்ஹாசனையும் பாராட்டி பா.ஜ.க உறுப்பினரான நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஓ மை காட்… இந்த மனிதர் நம்பமுடியாதவர், அகராதியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அவர் மீறுகிறார். அவர் தடுக்க முடியாதவர். அவர் ஒரு மேதை… அவர் தான் பெஸ்ட்” என பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் மத்திய அரசை விமர்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” எனும் வரிகள் ஆளும் அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!” என்று பதிவிட்டு காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஜீ தமிழ் நிகழ்ச்சியில் யுவன் – ஆர்யா : எதிர்பார்ப்பின் உச்சத்தில் சூப்பர் குயின்

இந்தநிலையில் நடிகர் கமலஹாசன் மீது சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் வரி இருப்பது மட்டுமின்றி, சாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள “குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு, குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு.. ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-மே” என்ற பாடல் வரிகள் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் இருப்பதாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 3ம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் கொடுத்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.