நீதிமன்றத்துக்கு எல்லைக் கோட்டை வரையறுப்பதா? சட்ட அமைச்சருக்கு ப. சிதம்பரம் கண்டனம்

நீதிமன்றம் அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களை அச்சுறுத்துவதற்காக ஆங்கிலேயேர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவுக்கு பதிலளித்திருந்த மத்திய அரசு, தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, மறுபரிசீலனை முடிவடையும் வரையில் இந்த சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்கு பதியக் கூடாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பாஜக தலைவர்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
image
அந்த வகையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “நீதித்துறையையும் அதற்கு இருக்கும் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.
image
அதற்கு பதிலளித்த அவர், “அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கும் சட்டத்தை இயற்றவோ அல்லது அது மாதிரியான ஒரு சட்டத்தை நிலைத்திருக்க செய்யவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அதேபோல, நீதிமன்றங்களுக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கவும் சட்ட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனம் குறித்து பேசும் இவர்கள், முதலில் அதன் 13-வது சட்டப்பிரிவை படிக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கு எதிராக இருந்தால் அதனை செல்லாது என அறிவிக்க மேற்குறிப்பிட்ட 13-வது சட்டப்பிரிவு அனுமதி வழங்குகிறது” என ப. சிதம்பரம் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.