அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் சீருடை விநியோகம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடைகள் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விநியோகப் பணிகள் ஆண்டுதோறும் கல்வி மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2022-23) முதல் மாணவர்களுக்கான சீருடைகளை நேரடியாக பள்ளிகளிலேயே விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக பள்ளியின் முகவரி, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தேவைப்பட்டியலை மே 18-க்குள் மின்னஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.

அதன் நகலை பிரதி எடுத்து உரிய ஆவணங்களுடன் சேர்த்து தொகுப்பு அறிக்கையை இயக்குநரகத்தில் மே 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மிக முக்கியமான பணி என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழக அரசின் இலவச கல்வி உபகரணப் பொருட்களையும் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.