புதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு

புதுச்சேரி: ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் இரவில் கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சாலைகள் மேம்படுத்துதல், பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைப்பு, பெரிய வாய்க்கால்களுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒயிட் டவுன் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரி ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை நெடுகிலும் பெரிய வாய்க்கால் அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதிகளில் இந்த வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், அந்தந்த சாலையின் பெயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் (பழைய பிரெஞ்சு பெயர்கள், புதிய தமிழ் பெயர்களும்) எழுதப்பட்டு திசை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த சாலைகளில் உள்ள சுற்றுலாத் தலத்தின் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பெயர் பலகைகள் காவிநிறத்திலும் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் உள்ளன. இந்நிலையில் இந்தப் பெயர் பலகைகளில் மர்ம நபர்கள் சிலர் கருப்புநிற வண்ணங்களை பூசி அழித்துள்ளனர். காவி நிறத்தில் பெயர் பலகைகள் இடம் பெற்றிருப்பதால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

புதுச்சேரியில் சமீப காலமாக இந்தி திணிப்பு மற்றும் பாஜகவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கருப்புநிற வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் இயல்பாக வைக்கப்பட்ட பெயர் பலகைகள் தான் அவை. அதில் அரசியல் சாயம் பூசுவது விஷமத்தனமானது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.’’என்று குறிப்பிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.