மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை மேலும் 3 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: காங். சிந்தனை அமர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

உதய்பூர்: ஒன்றிய பாஜ அரசால் இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகுந்த கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். கட்சியை வலுப்படுத்தவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும் காங்கிரசின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடக்கிறது. 2ம் நாளான நேற்றைய கூட்டத்தில், நாட்டின் பொருளாாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. அதை சரி செய்ய வழி தெரியாமலும் திண்டாடிக் கொண்டிருக்கிறது. பாஜ ஆட்சியில் நாட்டின் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார பிரச்னைகளுக்கு ரஷ்யா-உக்ரைன் போர்தான் காரணம் என அரசு கூறுகிறது. இதை ஏற்க முடியாது. உக்ரைன் போர் நிலைமையை தீவிரமாக்கி உள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுதான் பணவீக்கத்திற்கு ஒரே காரணம் என கூறி விட முடியாது. ஏனெனில், உக்ரைன் போருக்கு முன்பாகவே இந்த நிலைதான் இருந்தது. அதை சரி செய்ய முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.கடந்த 1991ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு தாராளமயமாக்கலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது. 10 ஆண்டுகளில் புதிய சொத்துக்கள், புதிய தொழில்கள், புதிய தொழில் முனைனோர் உருவாக்குதல், மிகப்பெரிய நடுத்தர வர்க்கம், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி அதிகரிப்பு, 27 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது என நாடு மகத்தான பலன்களை பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் உலகமும், இந்தியாவும் நிறைய மாறிவிட்டது. அதற்கு ஏற்ப பொருளாதார கொள்கைகளை சீரமைக்க வேண்டிய மாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினர் கடுமையான வறுமையில் தவிப்பது, உலகளாவிய பசி குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் இருப்பது, பெண்கள் குழந்தைகளின் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது போன்ற பிரச்னைகைளை தீர்க்கும் வகையில் பொருளாதார கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.நியாயமற்ற முறையில், மோசமான அம்சங்களுடன் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டியின் விளைவுகளை அனைவரும் அறிவார்கள். இதனால் மாநிலங்களின் நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவீனம் அடைந்துள்ளது. அவைகளுக்கான அவசர திருத்த நடவடிக்கைகள் தேவை. தற்போது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நம்பிக்கை முற்றிலும் முறிந்துள்ளது. எனவே, வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள 5 ஆண்டு ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை குறைந்தபட்சம் மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும்.நாட்டின் நலன்களுக்கு தேவையான பொருளாதார கொள்கைகளை நாங்கள் தயாரிப்போம். அதை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆனால், தற்போதுள்ள அரசு யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். சிந்தனை அமர்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து, நாளை நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, காங்கிரசின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக, சிந்தனை அமர்வு கூட்டத்தின் இறுதி நாளான இன்று விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.கட்சி பதவிகளில் எஸ்சி, ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு காங்கிரசில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், கட்சிப் பதவியில் அனைத்து மட்டத்திலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளதாக சிந்தனை அமர்வு கூட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.ராஜூ அளித்த பேட்டியில், ‘‘பட்டியல் சாதிகள், பழங்குடியினர், ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு 50 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் கொண்டுவர உள்ளது. கட்சித் தலைவர் சோனியா காந்தியால் உருவாக்கப்பட்ட சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழு இது குறித்து முடிவு எடுத்துள்ளது. இது, காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்’’ என்றார்.குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிப்படுத்த புதிய சட்டம்அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அவர்களை கடனில் இருந்து முழுமையாக விடுவிப்பதையும்  இச்சட்டம் உறுதிப்படுத்த வேண்டும். சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சித்தால், காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்க்கும்,’ என்று கூறினார்.நவம்பரில் 14 முதல் 29 வரை நாடு தழுவிய போராட்டம்சிந்தனை அமர்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரசின் செயல்திட்டங்கள் தொடர்பாக கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்று பேசினார். இதில், நாட்டின் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேசிய அளவிலான 2ம் கட்ட ‘ஜன் ஜாக்ரன் அபியான்’ போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் நவம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதிருப்தி தலைவர்களின் முக்கிய கோரிக்கை ஏற்புகாங்கிரசில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உட்பட 23 மூத்த தலைவர்கள் அடங்கிய ‘ஜி23’ என்ற அதிருப்தி குழு, கட்சி தலைவர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. காங்கிரசில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, ‘காங்கிரஸ் தேர்தல் குழு’ செயல்பட்டு வருகிறது. இதன் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், இதற்கு பதிலாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டு, ‘காங்கிரஸ் நாடாளுமன்ற குழு’ அமைக்கும்படி, நேற்றைய சிந்தனை அமர்வு கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.  காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்தால், இது நடைமுறைக்கு வரும். ஆனால், சோனியா ஆதரவு தலைவர்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.