சினிமாவில் வன்முறை காட்சிக்கும் கடிவாளம் வருமா? – வழக்கு பதிவு

சமீபகாலமாக திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்களே வன்முறையாளர்களாகத்தான் நடிக்கிறார்கள். கொடூரமான வன்முறை காட்சிகளும் அப்பட்டமாக இடம் பெறுகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான சாணிக் காயிதம் படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதுமாதிரியான காட்சிகளை வரைமுறைபடுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன், பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். எந்தவித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அமைந்துள்ளது.

திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

எனவே இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது ”இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டது”, ”சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் கலர் பவுடர் தான்” போன்ற வாசகங்கள் இடம் பெற உத்தரவிட வேண்டும்.

மேலும் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது ஒளிபரப்படும் விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்துவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.