திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்: இரவு முழுவதும் நடைபெற்ற விழா; பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனப் பரிபாலனத்திலுள்ள ஸ்ரீ  திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூர்ணாபிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சித் தருகிறார். இக்கோயிலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமானதாகத் தல வரலாறு.

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்

இந்த ஐதிக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில்  திருஞானசம்பந்தர் திருமண விழாவாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்தாண்டு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நேற்றிரவு (19.5.2022) வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு  இரவு 9.30 மணியளவில் திருஞானசம்பந்தருக்குத் திருமறைகள் உபநயனம், திருவீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் செய்விக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க  வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத சிவாசார்யர்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்துத் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது .

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்

அதன் பின்னர் உலக நன்மைக்காகப் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். திருக்கல்யாண வைபவ நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுதும் கண்விழித்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் பேரின்பப்பேர் அளிக்கும் சிவ ஜோதிதரிசனம் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.