பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் சென்று திருமணம் செய்த ஜோடி

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரான்சு சமால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகமாக உயர்ந்து வருவது சுப்ரான்சு சமாலை பாதித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணுடன் சைக்கிளில் சென்று திருமணம் செய்வது என்று முடிவு செய்தார். மேலும் திருமண ஊர்வலத்துக்கு வருபவர்களும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினார். இதை மணமகனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதுடன், மணமகள் குடும்பத்தினரிடமும் கூறினார்கள். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருமே சைக்கிளில் சென்றனர்.
மணமகனும் சைக்கிளில் மணமகளுடன் ஊர்வலமாக சென்று திருமணம் செய்தார். இது அந்த பகுதி மக்களை வியக்க வைத்தது.
இது தொடர்பாக மணமகன் சுப்ரான்சு சமால் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்கிளில் ஊர்வலமாக சென்று திருமணம் செய்தேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இதனை ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே நோக்கமாக கொண்டிருந்தேன்.
இதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பு எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த திருமண விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருமே எங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.