20 லட்சத்தில் பஞ்சாப் கிங்ஸூக்கு கிடைத்த சொக்க தங்கம்! கொல்கத்தா அணியை புரட்டியெடுத்த இளம் நட்சத்திரம்

பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 261 ரன்களை சேஸ் செய்து 20 ஓவர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. 21 ஆண்டுகளாக நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை இவ்வளவு ரன்களை எந்த அணியும் சேஸ் செய்தது இல்லை. புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜானி பேரிடஸ்டோவும் பார்முக்கு திரும்பியிருப்பதுடன் 48 பந்துகளில் 108 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி பேட்டிங் இறங்கியது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து துரிதமாக ரன்களை சேர்த்தனர். சால்ட் 75 ரன்களும், நரைன் 71 ரன்களும் விளாசி அவுட்டாக, பின்னர் வந்த வீர ர்களும் அதிரடி காட்டி கொல்கத்தா அணியின் ரன்களை உயர்த்தினர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. 

இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் எப்படியும் கொல்கத்தா அணியே வெற்றி பெறும் என பலரும் யூகித்திருந்தனர். ஆனால் அனைவரின் கற்பனைகளையும் தவிடு பொடியாக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் இருந்தது. ஓப்பனிங் இறங்கிய பிரப்சிம்ரன் அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 54 ரன்கள் குவிக்க, மறுமுனையில் நங்கூரம்போல் நிலைத்து நின்று அதிரடி காட்டிய பேரிஸ்டோவ் சதமடித்தார். ஐபிஎல் ஏலத்தில் வெறும் 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷஷாங்க் சிங் கொல்கத்தா அணியின் பந்துகளை சிதறடித்து வாணவேடிக்கை காட்டினார்.

அவர் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தது மட்டுமில்லாமல் 8 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் 18.4 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்குப் பின்னர் பேசிய ஷஷாங்க் சிங், “பெவிலியனில் இருக்கும் போது பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தேன். அதில் நல்ல லென்தில் பந்து வருகிறது என தெரிந்தவுடன் அதிரடியாக ஆட வேண்டும் என எண்ணினேன். சுனில் நரைனுக்கு பதிலாக மற்ற பவுலர்களை நாங்கள் டார்கெட் செய்தோம். 

எங்களது முடிவுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஸ் எனக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளார். மறுமுனையில் ஜானி பேரிஸ்டோவ் எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த வெற்றியை பெற்றதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. இன்னும் 5 போட்டிகளில் சிறப்பாக ஆடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.