மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு: தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

Additional secretary inspects Cauvery delta dredging works: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர் வாரும் பணிகள் ரூ.80 கோடி திட்டமதிப்பில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4,964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அதனால் இப்பணிகளை ஜுன் 10-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து நீர் வரத்து அதிகரித்து 120 அடி மொத்த கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது நீர் மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே, அதாவது மே 24-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலவெளி கிராமத்தில் கல்லணைக் கோட்டம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் முதலைமுத்துவாரி வடிகால் தூர்வாரும் பணியையும், களிமேடு கிராமத்தில் வெண்ணாறு கோட்டம் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் முதலைமுத்துவாரி வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியையும், தென் பெரம்பூர் கிராமத்தில் வெண்ணாறு வடிநில கோட்டம் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் வெட்டிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியையும் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: பேரறிவாளன் விடுதலை கொண்டாட்டம்; ரத்தக் கண்ணீர் வருகிறது: கே.எஸ் அழகிரி கொந்தளிப்பு

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.இராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் (கல்லணைக் கால்வாய் கோட்டம்) அன்பரசன், செயற் பொறியாளர் பாண்டி, வெண்ணாறு வடிநில கோட்டம் செயற் பொறியாளர் மதன சுதாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.