இந்திய ஜனநாயகம் உடைந்தால் உலகத்துக்கே ஆபத்து – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: பிரிட்ஜ் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் ‘இந்தியாவுக்கான யோசனைகள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மஹூ மொய்த்ரா உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியாவில் 2 விதமான வடிவமைப்புகள் உள்ளன. ஒன்று கூச்சலிடுவது, மக்களின் குரல்களை ஒடுக்குவது. அதை பாஜக செய்கிறது. மற்றொன்று மக்களின் கருத்துகளை கேட்டறிவது. அதை காங்கிரஸ் செய்கிறது.

இந்தியாவில் உள்ள ஜனநாயகம், சர்வதேச அளவில் மிகுந்த பயனை அளிக்கும் நல்ல விஷயமாக உள்ளது. இந்த உலகத்தின் மைய நங்கூரமாகவே உள்ளது. அது உடைந்தால் இந்த உலகத்துக்கே ஆபத்தாக முடியும். இந்தியா என்பது மக்களுடன் நேரடி தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஆனால், பாஜக.வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்தியாவை ஒரு நிலப்பரப்பாக மட்டுமே பார்க்கிறது. அதனால்தான் ஒரு சிலர் மட்டுமே பலனடையும் வகையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கிறது. உக்ரைனின் 2 பிராந்தியங்களை அங்கீகரிக்க முடியாது. அமெரிக்காவுடான உக்ரைன் உறவை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது. அதேபோல்தான் தற்போது சீனா – இந்தியா எல்லை பிரச்சினையும் உள்ளது. லடாக், டோக்லாம் பகுதியில் என்ன நடக்கிறது. அந்த 2 இடங்களிலும் சீன படைகள் உட்கார்ந்துள்ளன. பான்காங் ஏரி பகுதியில் சீனா மிகப்பெரிய பாலம் அமைத்துள்ளது. அவர்கள் எதற்கோ தயாராகி கொண்டிருக்கின்றனர். ஆனால், அதைப் பற்றி மத்திய பாஜக அரசு பேசுவதற்கு தயாராக இல்லை. டோக்லாமில் உள்ள சீன படைகள், அருணாச்சலை கைப்பற்ற அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பதை சீனா விரும்பவில்லை.

இந்த வேளையில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க மத்தியில் உள்ள பாஜக அரசு தயாராக இல்லை. பல ஆண்டுகளாக எங்களுக்கு கிடைக்காமல் போன வாய்ப்பு தற்போது உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கும் வேளை பிறந்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜக.வை வீழ்த்துவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.