க.பொ.தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை – போக்குவரத்து வசதி

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை, நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி நிறைவடையும். ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.

பரீட்சை அனுமதி அட்டை

பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை தற்போதைக்கு பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின், கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு பிரவேசித்து தங்களின் அனுமதிஅட்டையினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை அனுமதி அட்டையில் ஏதாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்திற்குள் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிரிதியினை அனுமதி அட்டையுடன் இணைத்து பரீட்சை நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதி அட்டையில் தான் பரீட்சைக்கு தோற்றும் மொழி மற்றும் பாடங்களில் பிரச்சினை இருப்பின் அது பற்றி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் – 0112 284 208 அல்லது 0112 784 537 என்பதாகும்.

இதேவேளை, பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் தயாராகியுள்ளது. நாட்டின் தற்போதைய போக்கவரத்து நெருக்கடி நிலையினைக் கருத்திற்கொண்டு நேரகாலத்தோடு பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின்….

பரீட்சார்த்திகளுக்குப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின் அது பற்றி முறையிடலாம். இதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  0112 784 208, 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக் க முடியும். அத்துடன் துரித அழைப்பிலக்கமான 1911ற்கு அழைப்பை ஏற்படுத்தி முறையிடலாம். அல்லது மாகாண அல்லது வலய கல்விப் பணிபாளர்களுக்கும் அறிவிக்கலாம்.

மின்துண்டிப்பு நேரம் மறுசீரமைப்பு

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறையும் பரீட்சை நிலையங்களில் தனியான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மின்துண்டிப்பு செய்யப்படும் நேரம் மறுசீரமைக்கப்பட்டிருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.