மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் – பரிதாபமாக உயிரிழப்பு

இஸ்லாமியர் என்ற சந்தேகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டம் சார்ஸி பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் ஜெயின் (65). முதுமை காரணமாக அவரது மனநலம் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தனது மகனுடன் அவர் தங்கியிருந்தார். இதனிடையே, ஒரு கோயில் நிகழ்ச்சிக்காக பன்வாரிலாலை அழைத்துக் கொண்டு அவரது மகன் குடும்பத்தினர் கடந்த வாரம் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மத்தியப் பிரதேசம் திரும்பும் வழியில் பன்வாரிலால் திடீரென மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து, பன்வார்லால் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பன்வாரிலாலின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். தொடர்ந்து, பன்வாரிலால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாக்கும் வீடியோ
இந்த சூழலில், பன்வாரிலாலை பாஜக பிரமுகர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைலாக பரவியது. அதில், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான தினேஷ் குஷ்வாஹா, சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பன்வாரிலாலை எழுப்புகிறார். பின்னர் அவரிடம், “உன் பெயர் முகமது தானே..” எனக் கேட்டு தினேஷ் குஷ்வாஹா அவரை சரமாரியாக அறைகிறார்.
image
இவ்வாறு சுமார் 14 முறை முதியவரை அவர் பலமாக அறைகிறார். இதில் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து கீழே சரிந்து பன்வாரிலால் உயிரிழந்து விடுகிறார்.
இந்த வீடியோ மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த பன்வாரிலால் குடும்பத்தினர் தினேஷ் குஷ்வாஹா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தினேஷ் குஷ்வாஹா மீது கொலை வழக்கை பதிவு செய்து தலைமறைவாகி உள்ள அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

வீடியோ சோர்ஸ்: என்டிடிவிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.