முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக தொடரும் மத வெறுப்பூட்டும் பிரச்சாரத்தின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது. முதியவரை உன்பெயர் முகமதுவா என்று கேட்டு பாரதிய ஜனதா நிர்வாகி அடித்து கொள்ளும் வீடியோ நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உன்பெயர் முகமதுவா? ஆதார் அட்டையை காட்டு என்று கேள்வி கேட்டபடியே முதியவரை சரமாரியாக அடித்து உதைக்கும் கொடூரம் மத்தியப்பிரதேச மாநிலம் நீமச் நகரில் நடந்தேறியுள்ளது. 65 வயதான அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சரிவர பதில் சொல்ல முடியாமல் திணற கொஞ்சமும் இரக்கமின்றி அந்த நபர் இடைவிடாமல் மீண்டும் மீண்டும் அடிக்கிறார். அடிப்பவர் பாரதிய ஜனதா முன்னாள் கவுன்சிலரின் கணவர் தினேஷ் குஷ்வாஹா. முதியவர் பெயர் பன்வாரிலால் ஜெய். இவர் ரத்ளம் மாவட்டம் சார்ஜியை சேர்ந்தவர். ராஜஸ்தானுக்கு குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொண்டு திரும்புகையில் காணாமல் போன பன்வாரிலால் அவரது குடும்பத்தினருக்கு சடலமாக கிடைத்துள்ளார். இறுதி சடங்குகள் நடந்து முடிந்த பின்னரே இந்த வீடியோவை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டி உள்ளூர் காவல் நிலையத்தை இரவோடு இரவாக முற்றுகையிட்டனர். அரசியல் லாபத்துக்காக வெறுப்புணர்வை பாரதிய ஜனதா தூபம் போட்டு வளர்த்தன் விளைவு இது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அரசியல் வேண்டாம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் என்று ஆளும் பாரதிய ஜனதா அரசின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். முதியவரை சரமாரியாக அடித்து உதைத்த பாஜக நிர்வாகி  தினேஷ் குஷ்வாஹா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாகிவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டதால் சரிவர பதில் சொல்ல முடியாத முதியவரை முஸ்லீம் என்று தவறாக கருதி அடித்தே கொன்றிருப்பது மத்திய பிரதேசத்தில் மத வெறுப்புணர்வு எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.